தமிழக நிகழ்வுகள்
குன்னுாரில் மின்சாரம் தாக்கி யானை, காட்டு பன்றி பலி
குன்னுார் ; குன்னுாரில் தனியார் இடத்தில் மின்சாரம் தாக்கி யானை, காட்டு பன்றி பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் மானார் எஸ்டேட் தனியார் காட்டேஜ் அருகே, மூப்பர்காடு கிராமத்துக்கு தாழ்வழுத்த மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், துர்நாற்றம் வீசியதால் பழங்குடி மக்கள், போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
நேற்று மாலை வனத்துறையினர், மின் ஊழியர்கள் உதவியுடன், ஆய்வு செய்தபோது, மின்சாரம் தாக்கி, 30 வயதான ஆண் யானை மற்றும் காட்டு பன்றி இறந்து கிடந்தது தெரியவந்தது.உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறுகையில்,”செடிகளின் மீது கம்பி அறுந்த நிலையில் இருந்ததால், மற்ற வனவிலங்குகளும் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. இரவு நேரமானதால், நாளை(இன்று) ஆய்வு செய்யப்படும். பிரேத பரிசோதனைக்கு பின், முழுவிபரம் கூறப்படும்,” என்றார்.
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு ரோந்து சென்றனர்.அப்போது, பிப்டிக் சாலையில் உள்ள ஐ.டி.ஐ., அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வினோபா நகரை சேர்ந்த சுப்புராயன் மகன் சதீஷ்குமார்,18; சாணாரப்பேட் கிழக்கு பகுதியை சேர்ந்த பெலிக்ஸ் மகன் பிராங்க்ளின்,19; என்பதும், இவர்கள் சிறுவர்கள், மாணவர்களுக்கு விற்பதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு கைது செய்ததோடு, 180 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாய்களை கொலை செய்தவர் மீது வழக்கு
திருவாடானை: விஷம் வைத்து நாய்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.திருவாடானை அருகே கங்கானரேந்தல் கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது. இறைச்சியில் விஷத்தை ஊற்றி ஆங்காங்கே இலைகளில் வைக்கப்பட்டது.
அதை தின்ற நாய்கள் பலியானது.
இது குறித்து மணிமுத்து புகாரில் தொண்டி போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த முனிஸ்வரன் என்பவரை தேடிவருகின்றனர். இறந்த அனைத்து நாய்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் புதைக்கப்பட்டது.
கஞ்சா வியாபாரிகள் சொத்து முடக்கம்
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை, நாகமலை புதுக்கோட்டை, சேடப்பட்டி, ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் கஞ்சா கடத்திய, பதுக்கியோர், அவர்களின் உறவினர்களின் ரூ.7.12 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டன.கஞ்சா வழக்கில் 205 பேர் வழக்கு பதியப்பட்டது. 109 பேரிடம் பிணை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. 35 பேர் கைது செய்யப்பட்டு, 11 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.
பெண்ணை கேலி செய்தவர் கைது
போடி : போடி குப்பிநாயக்கன்பட்டி மாணிக்கவாசகர் தெரு ரேவதி 38. தினக்கூலி. வேலைக்கு போடி புதூர் போயன்துறை ரோடு டிரைவர் பிரபாகரனின் 43, ஆட்டோவில் சென்றார். ஆட்டோ டிரைவர் பெண்ணை கேலி செய்தார். இதனால் அந்த ஆட்டோவில் செல்வதை பெண் நிறுத்தினார். அதன் பின் பெண்ணின் வீட்டுப்பக்கம் சென்ற ஆட்டோ டிரைவர் இடையூறு செய்தார். இதனை அப்பெண் கண்டித்தார். ஆத்திரமடைந்த பிரபாகரன், பெண்ணை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். போடி டவுன் போலீசார் ஆட்டோ டிரைவர் பிரபாகரனை கைது செய்தனர்.
‘பாஸ்தா’ சாப்பிட்ட இளம்பெண் பலி
செஞ்சி : விழுப்புரம் அருகே ‘பாஸ்தா’ என்ற உணவை சாப்பிட்ட இளம் பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அன்னியூரைச் சேர்ந்தவர் பழனிவேல் மகள் பிரதீபா, 22. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 24, என்பவரை காதலித்து, கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.நேற்று முன்தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற தம்பதி இரவு, திருவாமாத்துார் விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், பாஸ்தா சாப்பிட்டு வீட்டிற்குச் சென்றனர்.இரவு 11:30 மணிக்கு பிரதீபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
உடன், அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, பிரதீபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.போலீஸ் விசாரணையில், இறந்த பிரதீபா, இருதய நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.எனினும், பிரதீபாவின் தந்தை பழனிவேல், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கஞ்சனுார் போலீசில் புகார் அளித்தார். ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.
அண்ணன் அடித்து கொலைதம்பிக்கு போலீஸ் வலை
திருப்பூர்: திருப்பூரில், சொத்து தகராறில் அண்ணணை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன்கள் நாகராஜ், 42, கார்த்திக், 30; பனியன் நிறுவன தொழிலாளிகள். இருவருக்கும் திருமணமாகவில்லை.அண்ணன், தம்பி இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது.
நாகராஜ் பெயரில் உள்ள, இரண்டு சென்ட் இடத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி தம்பி கார்த்திக் கேட்டு வந்தார்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வந்த இருவரும் வீட்டில் மது அருந்தினர். போதையில் ஏற்பட்ட பிரச்னையில், ஆத்திரமடைந்த கார்த்திக், கட்டையால் அண்ணன் நாகராஜை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அவர் இறந்தார்.திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர்
கள்ளக்காதலியை கொலை செய்த மேஸ்திரி சிறையில் அடைப்பு
மறைமலை நகர் : கள்ளக்காதலியை சுத்தியால் தாக்கி கொலை செய்த மேஸ்திரியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மறைமலை நகர் சாமியார் கேட், பாபா கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலை, 35. இவரது கணவர், 2019ல் விபத்தில் உயிரிழந்தார்.அஞ்சலைக்கும், மெல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி முனுசாமி, 40, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
முனுசாமி, தன் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து, மூன்று ஆண்டுகளாக அஞ்சலையுடன் குடும்பம் நடத்தினார்.இந்நிலையில், அஞ்சலையின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.கடந்த 7ம் தேதி இரவு நடந்த சண்டையின்போது, அஞ்சலை தலையின் வலது பக்கத்தில், சுத்தியலால் முனுசாமி பலமாக தாக்கி, அங்கிருந்து சென்றார்.ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அஞ்சலையை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.அஞ்சலையை தாக்கிய பின், மறைமலை நகர் காவல் நிலையத்தில் சரணடைந்த முனுசாமியை, போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாராயம் விற்ற பெண் கைது
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சங்கராபுரம் அடுத்த கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற கோவிந்தன் மனைவி ஜோதி, 30; என்பவரை கைது செய்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
பள்ளி மாணவி மாயம்போலீஸ் விசாரணை
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த கடுவனுாரைச் சேர்ந்தவர் செல்வம், 51; இவரது 16 வயது மகள் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.செல்வம் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்