கொரோனா பூஸ்டர் டோஸ்: 75 நாட்களுக்கு இலவசம் – மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும். எனவே, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் பூஸ்டர் டோஸ்களையும் மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 15ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் இலவசமாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 199.12 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,61,58,303 அமர்வுகள் மூலம் இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,32,457 ஆக அதாவது 0.30 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.49 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,447 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,11,874 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.68 சதவீதமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.