கோத்தபய தப்பிச்செல்ல உதவியா?: இந்திய தூதரகம் மறுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியான செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தார் மற்றும் பாதுகாவலர்களுடன், ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பி சென்றார். அங்கு அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பும் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛அதிபர் கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியது என்ற ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை திட்டவட்டமாக மறுக்கிறோம்.

latest tamil news

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், ஜனநாயக நிறுவனங்கள், இலங்கை அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் மட்டுமே இலங்கை மக்களுக்கு இந்தியா உதவுகிறது. இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கான அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.

அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச்சென்ற நிலையில், அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டுவிட்டதாக கண்டனம் தெரிவித்து மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். இலங்கை பிரதமர் அலுவலகம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.