குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கண்டி கிளை அலுவலகத்திற்கு கடவுச்சீட்டு பெற வரும் இளைஞர்களுக்கு ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்து 6,000 முதல் 50,000 ரூபா வரை பணம் பெற்றதாகக் கூறப்படும் அந்த அலுவலகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் மற்றும் மேலும் இருவரை அங்கு இருந்த இளைஞர்கள் குழுவொன்று பிடித்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கு கண்டி அலுவலகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பங்களையே வழங்குகிறது. குறித்த சந்தேக நபர்கள் சில விண்ணப்பங்களை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டு பணத்திற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக 40,000 முதல் 50,000 ரூபா வரையிலும், சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்காக 6000 ரூபா வரையிலும் சந்தேகநபர்கள் பெற்றுள்ளதாக இந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் 25,000 ரூபாவை முற்பணமாக பெற்றுக் கொண்ட போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்த இளைஞர்கள் குழுவொன்றினால் மூன்று சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில், குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் சில காலம் பணிபுரிந்தவர் என கூறப்படும் ஒருவரும், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.