திம்பம் மலைப்பாதையோர தடுப்புச் சுவரில் ஹாயாக நடந்து சென்ற சிறுத்தையை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர். வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
இதையடுத்து சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர். திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்புச் சுவர் மீது சிறுத்தை நடமாடிய சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM