சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம்: யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது என யுஜிசி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உயர்கல்வி சேர்க்கை என்பது அந்தந்த மாநில பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை ஒன்றை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில், கல்லூரி மாணவர் சேர்க்கையை உடனடியாக முடித்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளை பொறுத்தவரை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்தபிறகு ஒரு வாரத்திற்கு கால அவகாசம் வழங்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒருமாதம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் மாணவர்கள், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.