மும்பை: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என்று ஆளுநருக்கு உத்தவ் தாக்கரே சார்பில் கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்நிலையில் ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும், ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராகவும் சிவசேனா கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட கொறடாவை ஆளுநர் அங்கீகரித்ததற்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு விசாரித்தபோது விடுமுறை முடிந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கான உரிய அமர்வை ஏற்படுத்த சிறிது காலம் தேவைப்படுவதாகவும், அதனால் வழக்கின் விசாரணையை தள்ளி வைப்பதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்தார். மேலும், இடைப்பட்ட காலத்தில் இருதரப்பு எம்எல்ஏக்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே புதிய அமைச்சரவை பொறுப்பு ஏற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரையும், அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என்று மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சார்பில் வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான தகுதிநீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், எந்தவொரு ஊதியம் பெறும் பதவிகளிலும் (அமைச்சர்கள்) அவர்களை நியமிக்க கூடாது. பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்படக்கூடிய நபர்களுக்கு அமைச்சர்கள் நியமனம் அல்லது ஊதியம் பெறும் பதவிகளை வழங்குவது சட்டப்படி தவறு’ என்று தெரிவித்துள்ளார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தவிர, 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்துள்ளனர். அதனால், அவர்களுக்கு அமைச்சர்கள் பதவி வழங்கப்படுமா? என்பது கேள்வியாக உள்ளது.