சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் நிறுவனம் சுராணா. கடந்த 2012-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகத் தங்கத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து இந்த நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், 400 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே சுராணா பவர் பிளான்ட் நிறுவனம், கடந்த 2020-ம் ஆண்டு கர்நாடகாவில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதாக வங்கிகளில் போலியான ஆவணங்களைக் கொடுத்து சுமார் 1,495 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரில், சுராணா பவர் பிளான்ட் நிறுவனம் வட்டியோடு சேர்த்து 1,727 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வங்கி மோசடிப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தப் புகார் தொடர்பாக, சுராணா நிறுவன இயக்குநர்கள் விஜயராஜ் சுராணா, தினேஷ் சந்த் சுராணா, கௌதம் ராஜ் சுராணா, சாந்திலால் சுராணா ஆகிய நான்கு பேர் மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்திருந்தது. மேலும், இந்த நிறுவனம், பல ஆண்டுகளாகச் சரியான கணக்கு காட்டவில்லை என்பதும், பொய்யான கணக்குகளைக் காட்டி 250 கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிறுவனத்தின் மீது, சட்டவிரோத தங்க இறக்குமதி, வங்கி மோசடி, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, வெளிநாடுகளில் முதலீடு என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இந்தப் புகார் தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுராணா நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் விஜயராஜ் சுராணா, தினேஷ் சந்த் சுராணா என்பவரையும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆனந்த், பிரபாகரன் என்பவர்களையும் கைதுசெய்திருக்கிறது. சுராணா நிறுவனம் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் வரும் 27-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.