திருமலை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான முர்முவுக்கு தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகள் திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாஜக வேட்பாளர் முர்முவும், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் மாநில கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேவும் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு திடீரென ஆதரவு அளித்துள்ளனர்.
சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற நிலையில், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் இருந்து விலகினார். நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்து தோற்றார். மோடியை கடுமையாக விமர்சித்தார். அவருக்கு எதிராக 2019மக்களவை தேர்தலில் தேசிய அளவில் 3வது அணியை உருவாக்க முயன்று தோற்றார். ஆனால், இந்த நிலையில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரை தெலுங்கு தேசம் கட்சி வலுப்படுத்தியுள்ளது. அதேபோன்று, பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்முவை தெலுங்கு தேசம் ஆதரிக்கும்’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஆந்திராவில் பாஜ.வுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க சந்திரபாபு காய் நகர்த்துவதாக கருதப்படுகிறது.
அதுபோல, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில், சமீபத்தில்தான், சிவசேனா கட்சியை உடைத்து பாஜக ஆதரவுடன் மீண்டும் சிவசேனா பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதனால் பாஜக மீது உத்தவ்தாக்கரே கடுமையான கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில், சிவசேனா எம்.பிக்கள் பாஜக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், தாக்கரேவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எம்எல்ஏக்களை இழந்த நிலையில், எம்பிக்களை தக்க வைக்க முர்முவை ஆதரிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். அதன்படி, முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுவும் சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.