டோக்கியோ : தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு டோக்கியோவில் நேற்று நடந்தது.
ஜப்பான் பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. இதற்காக நாட்டின் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரெடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.கடந்த 8ம் தேதி மேற்கு ஜப்பானின் நரா என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் முன் சாலையில் நின்று மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவருக்கு பின்னால் நின்ற நபர் சுட்டதில், ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரது இதயம் மற்றும் கழுத்து பகுதியில் குண்டு பாய்ந்தது. சிகிச்சை பலனின்றி அபே உயிரிழந்தார். அவரை சுட்ட டெட்சுவா யாமாகாமி, 41, என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, ஜப்பான் மேல்சபை தேர்தலில், ஷின்சோ அபேவின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு டோக்கியோ நகரில் நேற்று நடந்தது. அவரது உடல் கறுப்பு நிற காரில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் தலை குனிந்தபடி நின்று தங்கள் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அபேவின் மனைவி ஏகி அபே, நெருங்கிய உறவினர்கள், பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.டோக்கியோவின் நாகாடோச்சோவில் பிரதமர் இல்லம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளன.
இப்பகுதியில், ஷின்சோ அபே 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இப்பகுதி வழியாக சென்ற இறுதி ஊர்வலம், ஸோஜோஜி கோவிலை அடைந்தது. அங்கு ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement