புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பியதை கண்டித்து போராட்டம் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர்களுடன் ஆலோசிக்கும் கூட்டம் டில்லியில் நாளை நடைபெறுகிறது. ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் பங்கு விற்பனை தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி. ராகுலிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 2ம் தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் சோனியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் ஆஜராகும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் ஜூலை 21ல் ஆஜராக வேண்டும் என சோனியாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதை கண்டித்து மாநில வாரியாக போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
இதற்காக டில்லியில் நாளை அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் பொதுச்செயலர்கள் செயற்குழு உறுப்பினர்கள் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.அதில் சோனியா ராகுல் பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.சோனியாவுக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்தும் வரும் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப். மாதத்தில் மாநாடு நடத்தி காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement