புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் முகமது பைசல். இவரது மருமகன் அப்துல் ராசிக் தங்கல், இலங்கையில் ‘எஸ்ஆர்டி ஜெனரல் மெர்ச்சன்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கு லட்சத்தீவில் இருந்து டுனா மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ‘லட்சத்தீவு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட்’ என்ற போலி நிறுவனத்தை 2016-2017ம் ஆண்டு உருவாக்கி, லட்சத்தீவை சேர்ந்த மீனவர்களிடம் 287 மெட்ரிக் டன் டுனா மீன்களை கொள்முதல் செய்து, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துள்ளார். இதற்காக, கொச்சியில் உள்ள டுனா மீன் ஏற்றுமதியாளரான, ‘ஆக்சிலரேட்டட் ப்ரீஸ் ட்ரையிங் கம்பெனி’யை (ஏஎப்டிசி) ஏற்றுமதி செய்வதற்காக பைசல் நியமித்துள்ளார். ஆனால், எஸ்ஆர்டி நிறுவனத்திற்கு முதலில் அனுப்பிய மீன்களுக்கான ரூ.60 லட்சம் வழங்காததால், இந்த ஏற்றுமதியில் ஈடுபட கொச்சி நிறுவனம் மறுத்தது. இதனால், மீனவர்களுக்கு ரூ.9 கோடி வரை மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை முறைகேடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து, எம்பி பைசலின் டெல்லி, கோழிக்கோடு, லட்சத்தீவில் உள்ள வீடுகள், லட்சத்தீவு கூட்டுறவு லிமிடெட் நிர்வாக இயக்குனர் வீடு, அலுவலகம், இலங்கையை சேர்ந்த எஸ்ஆர்டி நிறுவனம் உட்பட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கின.