சென்னை: தமிழகத்தில் 2 தனியார் குழுமங்களில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத வருவாய் ரூ.500 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித் துறை ஆணையர் ராகேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மன்னார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செய்யாதுரை. தோல் வியாபாரம் செய்து வந்த இவர், எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில், பெரிய அளவில் நெடுஞ்சாலைப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
வரி ஏய்ப்பு செய்ததாக செய்யாதுரைக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 2018-ம் ஆண்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவரது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பகுதியில் உள்ள, எஸ்.பி.கே. நிறுவனத்திலும், அதையொட்டிசெய்யாதுரைக்குச் சொந்தமான வணிக வளாகம், அருகில் உள்ள செய்யாதுரையின் வீடுகளிலும் வருமான வரித் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ரூ.183 கோடி ரொக்கம், 105 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான சொத்து ஆவணங்களும் சிக்கின.
7 குழுக்கள் சோதனை: இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரைக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில், மதுரையைச் சேர்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் அண்மையில் 7 குழுக்களாகப் பிரிந்து, திடீர் சோதனை மேற்கொண்டனர். எஸ்.பி.கே. நிறுவனம் தனியார் வங்கியில் வைத்திருக்கும் கணக்கு தொடர்பாகவும், அவரது ஆவணங்களில் உள்ள வங்கி வைப்புத்தொகை விவரங்கள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
ஆரம்பத்தில் செய்யாதுரை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். பின்னர் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கும் நெருக்கமானவராக மாறியுள்ளார்.
பழனிசாமி தமிழக முதல்வராக இருந்தபோது, நெடுஞ்சாலைத் துறை அவரது கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இத்துறையிலிருந்து செய்யாதுரை நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டதன் மூலம், ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில்தான், செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிமுக பிரமுகர்: கோவை வடவள்ளி நாராயணசாமி நகரைச் சேரந்தவர் இன்ஜினீயர் சந்திரசேகர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் இவர், ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளராகவும், எம்ஜிஆர் இளைஞரணியின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார். இதுதவிர, சில ஒப்பந்த நிறுவனங்களையும் சிலருடன் இணைந்து, நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஷர்மிளா, கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் அண்மையில் வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை ராஜன் வீடு, பீளமேட்டில் உள்ள, அவருக்குத் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடைபெற்றது.
இதுதவிர, புலியகுளத்தில் சந்திரசேகர் தம்பதி நடத்தி வரும் ஆலயம் அறக்கட்டளை அலுவலகம், வடவள்ளியில் உள்ள, சந்திரசேகரின் சகோதரர் செந்தில் பிரபு வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, தனியார் நிறுவன மேலாண் இயக்குநரான பீளமேடு சந்திரபிரகாஷ் வீடு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளரான சந்தோஷ் சகோதரர் வசந்தகுமாரின் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை 6 நாட்கள் நீடித்தது.
ரூ.500 கோடி வருவாய் மறைப்பு: இது தொடர்பாக வருமான வரித் துறை ஆணையர் ராகேஷ் குப்தா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கட்டிடப் பணிகள், ரியல் எஸ்டேட், விளம்பர நிறுவனம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இரண்டு குழுமங்களில், கடந்த 6-ம் தேதி முதல் சென்னை, மதுரை, கோவை உட்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
இதில், வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. முதல்கட்ட விசாரணையில், இரு குழுமங்களும் சில ஆண்டுகளாக, போலியான கொள்முதல் மற்றும் செலவுக் கணக்குகளைக் காண்பித்து, பல கோடி ரூபாய் வருவாயை மறைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதில் ஒரு குழுமம், கொள்முதல் உட்பட பல்வேறு பரிவர்த்தனைகளை போலியாக மேற்கொண்டு, பின்னர் ரொக்கமாக திரும்பப் பெற்றது தெரிய வந்துள்ளது. பங்குதாரர் நிறுவனத்திலிருந்து வந்த மிகப் பெரிய லாப வருவாயை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிறுவனம் போலியாக கொள்முதல் செய்தல், துணை ஒப்பந்தப் பணிகளுக்கு செலவு செய்தல் போன்றவைகளை காண்பிப்பதற்காக, பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டாத பரிவர்த்தனைகளை ரகசியமாகப் பராமரித்து வந்த ஆவணங்கள், எலெக்ட்ரானிக்ஸ் ஆதாரங்கள் மற்றும் போலி பரிவர்த்தனை ஆவணங்களும், வருமான வரி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில், முதலீடு மற்றும் கடன்கள் போலியாக மேற்கொள்ளப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இரு குழுமங்களும் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.