போலி பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் தமிழக உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பியான டேவிட்சன் தேவாசிர்வதம் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், மதுரை அவனியாபுரத்தில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்கள் பெறப்பட்டதாகவும், இந்த பாஸ்போர்ட்கள் பெறப்பட்ட காலக்கட்டத்தில் மதுரை காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை பட்டியலில் அப்போதைய மதுரை காவல் ஆணையர் டேவிட்சனும் சேர்க்கப்பட்டார் எனவும்,வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க கோரி உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சனுக்கு, உள்துறை செயலர் கடிதம் அனுப்பியதோடு இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட், தபால் அதிகாரிகளை விசாரிக்க துறை ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைக்கு ஒப்புதல் கிடைக்காததால் விசாரணை தடைபட்டது என்று தெரிவித்த அவர் டேவிட்சனின் அதீத தாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் இது தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
காவல் ஆணையரின் தலையீடு இல்லாமல் போலி ஆவணங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது என குற்றஞ்சாட்டியுள்ளார் அண்ணாமலை.
தற்போது டேவிட்சன் உளவுத்துறை ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது எனவும் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிபிஐ விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.