சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் ‘பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள்.
பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
டாக்டர் ஷர்மிளா
சிலருக்கு இயல்பிலேயே தலைமைப் பண்பு இருக்கும். சிலர் அதை காலப்போக்கில் கற்றுக்கொள்வார்கள்,வளர்த்துக்கொள்வார்கள், மேம்படுத்திக் கொள்வார்கள். நாளைய தலைவர்கள் உருவாவதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மென்ட்டார்கள் என எல்லோருக்கும் பங்குண்டு.
தலைமைப் பண்பு ஏன் தேவை?
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்பின் அவசியத்தைச் சொல்லி, அதைக் கற்றுக்கொள்ள வலியுறுத்துவதன் மூலம், அவர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இருக்கும். நினைத்த விஷயங்களைச் செயல்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்வார்கள்.
தலைமைப் பண்பு என்பது தன்னம்பிக்கையைத் தரும். பிரச்னைகளுக்கான தீர்வுகளை க்ரியேட்டிவாக யோசிக்கவைக்கும். குழுவுடன் இணைந்து செயல்படும் மனநிலையைத் தரும். பொறுப்புகளை உணர்ந்து வாழும் வாய்ப்புகளை உருவாக்கும்.
தலைவர்கள் பிறக்கிறார்களா, உருவாகிறார்களா?
எல்லாக் குழந்தைகளும் தலைவர்களாகத் தகுதியானவர்களே. தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய செயல். குழந்தைகள் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளைக் காட்டி, அதற்கான திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமைகளில் ஒன்று.
தலைமைப் பண்பைக் கற்றுக்கொள்ள அப்படி என்னவெல்லாம் தகுதிகள் தேவை?
தைரியம்
சுயகட்டுப்பாடு
நீதியின் பக்கம் நிற்பது
எப்போதும் ஒரு திட்டத்துடன் இருப்பது
எல்லைகளைக் கடந்து யோசிப்பது
எப்போதும் இன்முகத்துடன் இருப்பது
இரக்க குணம், அடுத்தவர்களைப் புரிந்துகொள்வது
எதையும் நுணுக்கமாக அணுகும் திறன்
பொறுப்புகளை உணர்தல்
மற்றவர்களுடன் ஒத்துழைத்து குழுவாக இணைந்து செயல்படுதல்
ஒற்றுமை
போலித்தன்மை இல்லாமலிருப்பது
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு ஏன் தலைமைப்பண்பு தேவை?
ஏனெனில் தலைமைப் பண்பை கற்றுக்கொள்ளும் பிள்ளைகள்…..
சக வயதினர் தரும் அழுத்தங்களுக்கு உள்ளாகாமல், எந்த விஷயத்திலும் சுயமாக முடிவெடுக்க, அந்த முடிவுகள் சிறப்பானவையாக இருக்க கற்றுக்கொள்வார்கள்.
வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வது எல்லோருக்குமான பிரச்னை. தலைமைப் பண்புடன் வளரும் பிள்ளைகளுக்கு அந்தச் சவால்களை எதிர்கொள்வதும் அவற்றுக்கான சாதுர்யமான தீர்வுகளைக் காண்பதும் எளிதாகிறது.
தகவல் தொடர்பில் சிறந்தவர்களாக வளர்வார்கள். சக மனிதர்களிடம் மரியாதையோடு நடந்துகொள்வார்கள். சுய ஒழுக்கம் இருக்கும்.
தலைமைப் பண்பு உள்ளவர்களால் மட்டுமே மற்றவர்களுடன் இணைந்து குழுவாகச் செயல்பட முடியும். அது அவர்களது வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும் குணமாகவும் அமையும்.
ஆஷ்லி
பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
எல்லாப் பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் தலைவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தலைமைப் பண்பு என்பது தானாக வளர்வது ஒரு புறம் இருந்தாலும் அது வளர்வதில் பெற்றோரின் பங்கும் குடும்பச் சூழலும்கூட பங்கு வகிக்கின்றன. இன்று நான் மேடைகளில் பேசுகிறேன்… பெற்றோருக்கு வகுப்புகள் எடுக்கிறேன்… பெரிய மனிதர்களுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்கிறேன். இதற்கெல்லாம் காரணம் என் அம்மா. சிறு வயதிலிருந்தே எனக்குள் தலைமைப் பண்பு வளர ஊக்கம் கொடுத்தார். என் தயக்கங்களையும் மனத்தடைகளையும் தகர்த்து தட்டிக் கொடுத்தார்.
பெற்றோர் செய்யும் தவறு
பெரும்பாலான பெற்றோர் செய்யும் தவறு என்ன தெரியுமா…? மற்ற பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளை ஒப்பிடுவது. அந்த ஒப்பீட்டை நாங்கள் எந்தச் சூழலிலும் விரும்புவதே இல்லை. அது எங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்படவே வழி செய்யும். நாங்கள் தலைமைப் பண்புடன் திகழ வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதற்குச் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவை…
தலைமைப் பண்புக்கான உதாரணங்களுடன் எங்களை அதற்குத் தயார்படுத்துங்கள்.
எந்த விஷயத்தையும் அடுத்தவர் தரப்பிலிருந்து அணுகும் தன்மையை எங்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
தன்னம்பிக்கை வளர உதவுங்கள்
பிரச்னைகளில் முடிவெடுக்க எங்களைப் பழக்குவதோடு, சரியான முடிவுகளை எடுக்கவும் வழிநடத்துங்கள்.
வகுப்பறை உள்பட வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொள்ள எங்களை ஊக்கப்படுத்துங்கள்.
குழுவோடு இணைந்து இயங்கும் தன்மையை சிறுவயதிலேயே எங்களுக்குப் பழக்குங்கள்.
எங்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை விடவும் எங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் நாங்கள் சிறப்பாக வர ஊக்கம் கொடுங்கள்.
குடும்ப விஷயங்களை எங்களோடு சேர்ந்து பேசுங்கள். பிரச்னைகளுக்கு எங்களால் என்ன தீர்வு தர முடியும் என்றும் கேளுங்கள்.
-ஹேப்பி பேரன்ட்டீனிங்