சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால், தமிழகத்தில் பொறியியல், துணை மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி மாணவர் சேர்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதியுள்ளார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளார்கள். கடந்த மே மாதம் தேர்வு தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெற்றது. வழக்கமாக மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தேர்வு முடிவடையும். இந்த முறை தேர்வு கால தாமதமாக தொடங்கியதால் விடைத்தாள்களும் தாமதமாக திருத்த தொடங்கப்பட்டன.
இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழு (UGC) அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு மேலும் ஒரு மாதம் காலதாமதம் ஆகலாம், எனவே உயர் கல்வி மாணவர் சேர்க்கையை முடித்து விடக்கூடாது என தெரிவித்து உள்ளது. இதனால் பொறியியல், அரசு கலை அறிவியல் கல்லூரி, பி.எஸ்.சி. நர்சிங் உட்பட துணை மருத்துவ படிப்புகள், வேளாண்மை படிப்பு, கால்நடை மருத்துவ அறிவியல் என உயர்கல்வி பிரிவில் மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்தப் பிறகு தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால், இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு காலதாமதம் ஆகும் எனத் தெரிகிறது. இதனால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் புதிய தலைமுறை சார்பாக கேட்டபோது உடனடியாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, சிபிஎஸ்சி வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்காகத்தான் மாநில கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டுமென நாங்கள் கோரிக்கை வைப்பதாகவும், புதிய கல்விக் கொள்கையை இதனால் தான் எதிர்ப்பதாகவும், இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை தான் செய்தியாளர்களை சந்தித்து விளக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு தாமதத்தால் தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தாமதமாகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM