திகார் சிறையில் இருந்தபடி எந்தெந்த சிறை நிர்வாக அதிகாரிகளுக்கு எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை வழங்குமாறு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உட்பட ஏராளமான மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திகார் சிறை நிர்வாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதன் மூலமாக சிறையில் இருந்தபடியே தனது சட்டவிரோத மோசடி செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் திகார் சிறை நிர்வாகத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என சுகேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஏற்கனவே சுமார் 12.5 கோடி ரூபாய் அளவிற்கு தன்னிடமிருந்து திகார் சிறை நிர்வாக அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
இதனை உறுதிப்படுத்திய அமலாக்கத்துறை சிறையில் இருந்தபடி அலைபேசி உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் தனது மோசடியை தொடர்ந்து செயல்படுத்த திகார் சிறை நிர்வாகிகளுக்கு மாதம் தோறும் 1.5 கோடி ரூபாய் வாங்கி வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை அடுத்து உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள் சுகேஷ் சந்திரசேகர் அடுத்த 10 தினங்களுக்குள் எந்தெந்த அதிகாரிகளுக்கு எல்லாம் பணம் வழங்கினார் என்பது தொடர்பாக பெயர் பட்டியலையும் மற்ற இதர விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்
– செய்தியாளர்: நிரஞ்சன்குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM