புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 26ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘இந்தியா-இலங்கை இடையிலான கடலின் ஆழத்தில் இருக்கும் ராமர் பாலம் இயற்கையாக உருவானது அல்ல. மனிதர்களால் கட்டப்பட்டது. இதன் கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அதனை மூடியிருக்கும் மணல் படிமங்கள், 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை,’ என அறிவியல்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதனால், சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும், அதனை பிரதான சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியசாமி பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு, சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலம் அகற்றப்படாது என உறுதியளித்து, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் மனுதாரர் தரப்பில் நேற்று ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘ராமர் பாலம் தொடர்பான மனு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதால் அதனை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை வரும் 26ம் தேதி விசாரிப்பதாக அறிவித்தார்.