கோவையில் மண்டபம் ஒன்றில் கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கிய பொன்விழா மற்றும் பிறந்தநாள் பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மலேசியா மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரவணன், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், தேனிசைத் தென்றல் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது தேவா பேசுகையில், “காலத்திற்கும் பெயர் சொல்லும் வரிகளை எழுதி என்னை தூக்கிவிட்டவர் வைரமுத்து. நான் இசையமைப்பதும், வைரமுத்து எழுதுவதும் ஐந்து நிமிடம் தான். வைரமுத்துவிற்கு “Expiry date” இல்லை. எழுதிக்கொண்டே இருப்பார். எனக்கும் வைரமுத்து பாட்டு எழுதினார், எனது மகனுக்கும் பாட்டு எழுதுகிறார். எனது பேரனுக்கும் பாட்டு எழுத வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் தேவா பேச தொடங்கும் முன், நேற்று இரவு வரை இருமலாக இருந்தது எனக் கூறவே, அவரது அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் துரைமுருகன் வெளிப்படுத்திய முக பாவனையால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. தேவாவைத் தொடர்ந்து ப. சிதம்பரம் பேசுகையில், “பாரதிதாசன் காலத்தில் நாங்கள் குழந்தைகள், கண்ணதாசன் காலத்தில் பள்ளி, கல்லூரி, தொழில் என ஓடிக்கொண்டிருந்தோம். வைரமுத்து காலத்தில் தான் பணிகளை சற்று ஓரங்கட்டி வைத்து இலக்கியத்தை நுகரும் வயதில், வைரமுத்து எழுதிக்கொண்டிருக்கிறார். எனவே தான் வைரமுத்து ஒரு நூற்றாண்டின் கவிஞர் என நான் எண்ணுவேன்.
வடுகபட்டி முதல் வாஷிங்டன் வரை வைரமுத்துவின் புகழ் பரவி இருக்கிறது. வடுகபட்டி தந்த தமிழ் குழந்தை இன்று கவிப்பேரரசாக உருவெடுத்திருக்கிறது. எண்ணம், வினைப்பாடு இவற்றை இணைப்பது மொழியே. லத்தின், இங்கிலாந்தில் காக்நிஷ் உள்ளிட்ட மொழிகள் அழிந்து விட்டன. காக்நிஷ் இன்று இங்கிலீஷ் ஆகி விட்டது. மொழி முக்கியம்.. மொழியை நாம் ஆள வேண்டும்.. மொழி நம்மை ஆள வேண்டும். ஒரு மொழியை ஆட்சி மொழியாக திணிக்க திணிக்க மற்ற மொழிகள் அழிந்து விடும் என்ற அச்சம் உள்ளது.
மொழியே நமக்கு அடையாளம். தமிழ் மொழி பொழிவோடு இருக்கும் வரை வைரமுத்து வாழ வேண்டும். இன்னும் பல விருதுகள் வைரமுத்துவிற்கு காத்திருக்கின்றன. 1972 இலக்கிய பணியை தொடங்கிய வைரமுத்துவின் பணி அவரது 100 ஆண்டுகள் வரை தொடர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசத் துவங்கியபோது, மைக்கை கைக்குட்டை வைத்து துடைத்து பேச தொடங்கியதால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. சிரிப்பலை எழவே “காலம் கெட்டு கெடக்கு ” என துரைமுருகன் நகைத்தார். இதன்பிறகு அவர் பேசுகையில், “வைரமுத்து என் உற்ற நண்பர்… உயிர் நண்பர்.. நான் எந்த கூட்டத்தில் பேசப்போனாலும் தலைப்பு செய்தியை அவரிடம் வாங்கிக்கொண்டுதான் செல்வேன்.
நேர்மையானவர், நிமிர்ந்து நடப்பவர், எந்த நிலையில் தன்னிலை மறவாதவர்.. கலைஞரும், வைரமுத்துவும் பேசாத நாட்களே இருக்காது. கவிதையில் எந்த அளவிற்கு வார்த்தை ஜாலம் இருக்கிறதோ, அதைவிட அதில் உரைநடை வீச்சு இருக்கிறது. உலகமே அழிந்தாலும் ஆற்றுப்படை நூல் தமிழ் பெருமை சொல்லும் இலக்கிய நயம் உள்ளவர்கள் நிச்சயம் ஆற்றுப்படையை படிக்க வேண்டும். வாழும் பாரதி, வாழும் பாரதிதாசன், வாழும் கண்ணதாசனும், வாழும் வைரமுத்துவும் நீங்கள் தான்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.