பணிநிரந்தரம், சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

* சித்தூர் மாநகரமே குப்பை கழிவு தேக்கத்தால் துர்நாற்றம்* உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைசித்தூர் : சித்தூரில் நேற்று, காந்தி சிலை அருகே தூய்மை பணியாளர்களுக்கு ஏஐடியுசி ஊழியர்கள் சங்க சார்பில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியுசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் பேசியதாவது:-  ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலின்போது தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை. அதேபோல் தற்காலிக தூய்மை பணியாளர்கள் தற்போதும் 8000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெற்றுக் கொண்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதனால், குறைந்த சம்பளத்துக்கு எங்களால் பணி செய்ய முடியாது என தூய்மை பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அரசு உயர்நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தூய்மை பணியாளர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வருகிறார்கள். மாநகரம் முழுவதும் சுத்தமான நகரமாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிறு கழிவு இருந்தாலும் அதை சுத்தம் செய்வது தூய்மை பணியாளர்களின் வேலை. அந்தவகையில், கொரோனா வைரஸ் நோய் எதிரொலியால் தூய்மை பணியாளர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து மாநகரத்தை தூய்மையாக வைத்து வந்தார்கள். அதேபோல் கொரோனா வைரசால், சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 170 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு இதுவரை மாநில அரசு எந்த ஒரு இழப்பீடு தொகை வழங்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமமான வேலைக்கு சமமான சம்பளம் வழங்க வேண்டும். முதல்வர் ெஜகன்மோகன் ரெட்டி கொடுத்த வாக்குறுதியான தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்த 170 குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதிகாரிகளின் மிரட்டல் இருக்கக் கூடாது. சுகாதார காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு வருடத்திற்கு இரண்டு ஜதை சீருடைகள் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சோப்பு, எண்ணெய், காலணிகள், கையுறை, முக கவசம் உள்ளிட்டவை வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். நாங்கள் பொது மக்களுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை. குப்பைகளை சுத்தம் செய்தால்தான் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு செல்வார்கள். ஆகவே மாநில முதல்வர் உடனடியாக தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லை என்றால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் ஏஐடியூசி ஊழியர் சங்க நகர தலைவர் மணி, துணைத்தலைவர் கோபி, செயலாளர் கிட்டு பாய் உள்பட ஏராளமான தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.சித்தூர் மாநகரத்தில் தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சித்தூர் மாநகரத்தில் அனைத்து சாலைகளிலும் தெருக்களிலும் குப்பை கழிவுகள் மலை போல் தேங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து சித்தூர் மாநகரத்தில் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என சித்தூர் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.