பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா நேற்று திடீர் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சமீப காலமாக கஞ்சா, மொபைல் பயன்பாடு போன்ற சட்டவிரோத நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா நேற்று திடீரென சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். சிறை அறைகளில் அவரே மொபைல், கஞ்சா உள்ளதா என ஆய்வு செய்தார். பெண் கைதிகளின் பிரச்னைகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின் அவர் கூறியதாவது:சில நாட்களுக்கு முன், சிறையில் ஹர்ஷா கொலையாளிகள் வீடியோ வெளியிட்டது குறித்து தீவிரமாக விசாரிக்கிறோம். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து, முருகன் கமிட்டி அளித்த சிபாரிசுகளை ஏற்று, பல அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சில அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. சிறையில், ‘5 ஜி’ அலைவரிசையை தடுக்கும் அளவுக்கு அதிநவீன மொபைல் ஜாமர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கைதிகளுக்கு சட்ட விரோதமாக போதைப் பொருள் வினியோகம், சிறப்பு சலுகைகள், மொபைல் பயன்பாட்டுக்கு கடிவாளம் போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.சமீபத்தில், கால்பந்தில் போதைப் பொருளை வைத்து, வெளியிலிருந்து துாக்கி எறிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். கைதி ஒருவர், சமீபத்தில் காலில் சுற்றிய பேன்டேஜ் துணியில், மொபைலை மறைத்து கொண்டு வந்திருந்தார். இது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறையில் கைதிகளை சந்திக்க வரும் குடும்பத்தினர், உறவினர்களிடம் பணம் வசூலிக்கப்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்தும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement