சென்னை: “பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்யும் மார்க்கெட்டிங் கமிட்டிகள் குறைந்தபட்சம் வாரத்தில் 3 நாட்களாவது இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உரிய முறையில் பருத்தி கொள்முதலுக்கான ஏற்பாடுகளை திமுக அரசு செய்யாததால், காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
பருத்தி மூட்டைகளோடு நாட்கணக்கில் விவசாயிகள் சாலையிலே காத்துக் கிடக்கும் அவலம் பல இடங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தொடர்புடையவர்கள் இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு விவசாயிகளை அலைக்கழிக்காமல் பருத்தி கொள்முதல் செய்திட வேண்டும்.
இதற்காக உள்ள மார்க்கெட்டிங் கமிட்டிகள் குறைந்தபட்சம் வாரத்தில் 3 நாட்களாவது இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தினகரன் கூறியுள்ளார்.