பெங்களூரு : விபத்தில் மூளை சாவு அடைந்த தனியார் கல்லுாரி பஸ் கிளீனர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.சிக்கபல்லாபூர் பாலகுன்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன் குமார், 24. தொட்டபல்லாபூரில் தனியார் கல்லுாரியில் பஸ் கிளீனராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில், படுகாயமடைந்த நவீன் குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.மூளைச்சாவு அடைந்த மகன் உடல் உறுப்புகள் மூலம், மற்றவர்களை வாழ வைக்கலாம் என அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர். பெற்றோரும் சம்மதித்தனர்.இதையடுத்து அவரது கல்லீரல், சிறுநீரகம், இதய வால்வு மற்றும் கண் விழித்திரை அகற்றப்பட்டது. இந்த உறுப்புகள் தேவைப்படுவோர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பெற்றோரின் இந்த செயலை பாராட்டி, சுகாதார துறை அமைச்சர் சுதாகர், ‘டுவிட்டரில்’ குறிப்பிட்டுள்ளதாவது:
மகனை இழந்த வேதனையிலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்த பெற்றோரின் பெருந்தன்மை உண்மையிலேயே முன்னுதாரணமானது. நவீனின் கல்லீரல், சிறுநீரகம், இதய வால்வு, கண் விழித்திரை ஆகியவை மாற்றப்பட்டு மற்றவர்களுக்கு உயிர் கொடுக்கும்.கடந்த 15 நாட்களில், விக்டோரியா மருத்துவமனையின் விபத்து காய பிரிவில் நடந்த, இரண்டாவது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement