பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை விட யுரேனஸ், ப்ளூட்டோ மீதே நிதி அமைச்சருக்கு ஆர்வம்: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ‘நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை காட்டிலும் யுரேனஸ், ப்ளூட்டோவில் தான் அதிக ஆர்வம்’ என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் அற்புத புகைப்படத்தை நாசா நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த புகைப்படத்தை  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் மறுபதிவு செய்திருந்தார். இதற்கிடையே, நாட்டின் பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை அரசு வெளியிட்டிருந்தது. இதை ஒப்பிட்டு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா அளித்த பேட்டியில், ‘‘நாட்டில் பணவீக்கம் குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டமிட்டுள்ளது என்பது குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வேறு சிலவற்றுக்கு முன்னுரிமை அளிக்கின்றார். அவருக்கு ப்ளூட்டோ, ஜூபிடர் மற்றும் யுரேனஸ் என கிரகங்களில் தான் அதிக ஆர்வம். அங்கு செல்வதற்கான வழியைதான் காட்டுகிறாரே தவிர, பொருளாதாரத்தை முன்னெடுக்கும் வழி அவருக்கு தெரியவில்லை’’ என்றார். * வன பாதுகாப்பு விதிக்கு எதிர்ப்புவன பாதுகாப்புக்கான புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் ஹர்ஷ் சவுகானுக்கு, காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் கே.ராஜூ எழுதியுள்ள கடிதத்தில், ‘காடுகள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம், புதிய வன பாதுகாப்பு 2022 விதிகளைஅறிவித்துள்ளது. இது பொதுமக்களின் எந்த ஆலோசனைகளையும் பெறாமல் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் ராஜூ எழுதிய கடிதத்தை கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாஜவை விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.