போர்களத்திற்கு நடுவே பூத்துகுலுங்கிய காதல்கள்! பொன்னியின் செல்வனில் காவிய காதல் யாருடையது?

பொன்னியின் செல்வனில் நிகழ்ந்த போர்களை விட., மலர்ந்த காதல்களே அதிகம்! 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ அரியணையில் நிகழ்ந்த சம்பவங்களின் வரலாற்றுப் புதினமே கல்கியின் “பொன்னியின் செல்வன்”. அரசனாக யார் வர வேண்டும்? யார் வரவே கூடாது என்பதே கதையின் கரு. அதற்காக கதை முழுவதும் போர்க்களத்தில் புழுதி பறக்க நகருமா என்றால் இல்லை! பூஞ்சோலைகளில் கடற்கரைகளிலும் சில சமயம் கடலின்மீது காதல் மலர்ந்தபடிதான் நகரும்! ஆம்! பொன்னியின் செல்வனில் நிகழ்ந்த போர்களை விட., மலர்ந்த காதல்களே அதிகம்! ஒருவர்க்கு ஒருவர்மீது மட்டுல்ல! பலர் மீது காதல் இயல்பாக மலரும்! முறியவும் செய்யும்! ஆனால் தமிழ் வாசகர்கள் நெருடலில்லாமல் அவற்றை ஏற்றிருப்பது பெரும் ஆச்சரியமே! அப்படி மலர்ந்த பல காதல்களில் சிறந்த சில காதல் மலர்கள் இதோ!

1. நந்தினி மீதான ஆதித்த கரிகாலன் காதல்:

நந்தினி! கல்கியின் தலைசிறந்த கற்பனை கதாபாத்திரம்! பேரழகியாக வர்ணிக்கப்பட்டவள்! கதையின்படி அவள் மீது காதல் கொண்டது ஆதித்த கரிகாலன்தான்! இருவருக்கும் காதல் மலரும், கொஞ்சும் தருணங்கள் பெருமளவு வர்ணிக்கப்பட்டிருக்காது. ஆனால் சோழ இளவரசனான தனது காதலி பாண்டிய வம்சத்தை சேர்ந்தவள் என்பது கரிகாலனுக்கு ஒரு தருணத்தில் பேரிடியாக தெரிய வரும். அடுத்த விநாடி நந்தினி கண்முன்னே பாண்டிய மன்னன் தலையை வெட்டிச் சாய்ப்பார் கரிகாலன். ஊரே இளவரசனை கொண்டாடும் உள்ளத்தில் காதலோடு வருந்திக் கொண்டிருப்பார் கரிகாலன்.

image

இந்த வருத்தத்தில் அரண்மனைப் பக்கமே வராமல் போர்க்களத்திலே அவர் காலத்தை கழிப்பதாக கதையில் கூறப்பட்டிருக்கும். பொன்னியின் செல்வன் டீசரில் “இந்த கள்ளும், பாட்டும், ரத்தமும் போர்களமும் எல்லாமே அதை மறக்கத்தான்.. அவளை மறக்கத்தான்.. என்னை மறக்கத்தான்” என்று ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் கர்ஜிப்பாரே! அந்த “அவள்” வேறு யாருமல்ல! நந்தினிதான்! அவளை பார்க்கும் தருணங்களை கரிகாலன் திட்டமிட்டு தவிர்ப்பார். முரணாக கரிகாலனது கடைசி மூச்சு நந்தினியின் கண்முன்னே தான் பறிபோகும். நந்தினியை பார்க்கச் சென்ற போதுதான் கரிகாலன் கொலை செய்யப்படுவார். இறக்கும்போது நந்தினியின் பேரழகு பொருந்திய முகத்தைத்தான் அவர் பார்த்திருப்பார். கொலை நிகழும்போது முழு இருள் அந்த அறையில் சூழ்ந்திருந்ததால் அவரது கண்களில் கடைசியாய் பதிந்த முகம் அவரது காதலியின் முகம்தான்!

வரலாற்றை உலுக்கிய ஆதித்த கரிகாலன் கொலை! ஆயிரம் ஆண்டுகளாக அவிழாத மர்ம  முடிச்சு! | Chola prince Aditha Karikalan killed! A mystery that has not  been revealed for a thousand years ...

2. குந்தவை – வந்தியத் தேவன் காதல்:

வாணர் குல அரசனான வந்தியத்தேவன் சோழ அரண்மனைக்குள் நுழையும்போது வெறும் ஆதித்த கரிகாலனின் நண்பன் மட்டும்தான். அனைத்து செல்வங்களும் இழந்த கையறு நிலையில் நின்ற ஒரு அரச குலம். குந்தவை சோழ பேரரசின் இளவரசி. மதிநுட்பத்திலும் ஈடு இணையற்றவளாக குந்தவையை நாவல் சித்தரித்து இருக்கும். இவர்கள் இருவருக்குமான உரையாடல் தருணங்கள் மிக அருமையாக, கம்பி மேல் நடக்கும் வித்தை போல காட்சிப்படுத்த பட்டிருக்கும். நண்பனின் தங்கை, சோழ இளவரசியிடம் எப்படி காதல் வார்த்தைகளில் பேச என வந்தியத்தேவன் தயங்கியிருப்பார். நாவலில் அதிகம் பேசும் கதாபாத்திரமான வந்தியத்தேவன் முதன்முறையாக தயங்கி நிற்கும் தருணம் அது. இவ்வளவு ஏன்! நந்தினியிடம் கூட காதல் வார்த்தைகளை போலித் தனமாக பேச முடிந்த அவரால் குந்தவையை பார்ப்பதற்கு நாணும் அளவுக்கு காதலும் கடமையும் அவரை பாடாய் படுத்தியிருக்கும்.

குந்தவை வந்தியத்தேவன் | பொன்னியின் செல்வன் ,தமிழ் | Blog Post by Thillai  Senthil | மாம்ஸ்ப்ரெஸ்ஸோ

மறுபக்கம் குந்தவை! தேசத்தை அபாயத்தில் இருந்து காக்கும் வியூகத்தை சரியாக அமைக்க வேண்டும் என்ற கடமையில் மிக தீவிரமாக இருக்கும்போதும், ஒரு படி கீழே இறங்கி “பழுவேட்டரையர் சிறையில் இருந்து தப்பிய உங்களை வேறு சிறையில் வைக்க போகிறேன்., அங்கிருந்து உங்களால் எப்போதும் தப்ப இயலாது.! அது என் இதயச் சிறை!” என்று வந்தியத்தேவனிடம் கூறியிருப்பார் குந்தவை. ஆம்! முதன்முதலாக காதலை குந்தவை தான் நேரடியாக வார்த்தைகளால் வெளிப்படுத்தி இருப்பார். இருவருக்கும் காதல் மலர்ந்த போதும் கடமையில் சற்றும் விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டதாக நாவலில் சொல்லப்பட்டிருக்கும். இதனால் காதல் வளரும் தருணங்கள் எல்லாம் அவ்வளவு அதிகமாக நாவலில் சொல்லப்பட்டிருக்காது. திருமணம் செய்து வாழ்வது காதலின் வெற்றி என்றால் இந்நாவலில் உள்ள சில வெற்றிக் காதல்களில் மிக முக்கியமான ஒன்று இவ்விருவரின் காதலே! தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் தமக்கையார் குந்தவை பிராட்டியார் கணவர் வந்தியத்தேவன் என்று இவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

image

3. பூங்குழலியின் காதல்கள்:

பொன்னியின் செல்வனில் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் கதாபாத்திரம் “பூங்குழலி”. படகோட்டும் பெண்ணான இவர் செவிவழிச் செய்திகளைக் கேட்டு அருள்மொழிவர்மன் மீது ஒரு காதலை வளர்த்துக் கொண்டிருப்பார். இது ஒரு தலைக் காதல் தான்., அருள்மொழியை நேரில் பார்க்கும்போது காதல் தெரியும் அளவுக்கு எந்தச் செயலையும் செய்திருக்க மாட்டார். வலிமையான ஓர் இளம்பெண்ணாக மட்டும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அவரை தவிர்த்து விடுவார்.

பூங்குழலி (கதைமாந்தர்) - Wikiwand

அடுத்ததாக அவருக்கு வந்தியத்தேவன் மீது மிக ஆழமாக ஒரு காதல் மலரும். ஈழம் நோக்கி நடுக்கடலில் வந்தியத் தேவனுடன் தனியாக பயணிக்கும்போது அதை நேரடியாக வெளிப்படுத்தி இருப்பார். “அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்” என்று துவங்கி அவர் காதல் பொங்க பாடியதை நாவல் வாசகர்களால் நிச்சயம் மறக்க முடியாது. ஆனால் வந்தியத்தேவன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் கடமை கடமை என்று நகரவே சோர்ந்து போய் விடுவார் பூங்குழலி.

Ponni's Beloved: June 2015

இறுதியாக பூங்குழலிக்கு சேந்தன் அமுதன் உடன் பழக்கம் ஏற்படும். இருவரும் அதுவரை வெவ்வேறு திக்கில், வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்தவர்கள் எனும்போதும் ஆச்சர்யமளிக்கும் வகையில் சட்டென்று இணைந்து கொள்வார்கள். அவர்கள் மனங்களும் இணைந்துவிடும். இருவரும் இணைந்து இறைப்பணி செய்யப்போகிறோம் என்று சொல்வார்கள்., ஆனால் கதையின் இறுதியில் அவர்கள் நினைத்துப் பார்க்காத ஒரு திருப்பம் நிகழும். பூங்குழலி தான் கனவில் கூட நினைக்காத உயரத்தை அடைவார். அது என்ன என்பதை நாவலில் தெரிந்து கொள்ளவும்! இல்லையெனில் படம் வெளியாகும் வரை காத்திருக்கவும்.

4. வந்தியத்தேவன் மீதான மணிமேகலையின் காதல்:

மொத்தம் 5 தொகுப்பாக வெளியான பொன்னியின் செல்வனில் கடைசி பாகத்தில் தான் மணிமேகலை பாத்திரம் அறிமுகமாகும். ஆனால் வாசகர்களால் மறக்கவே முடியாத அளவுக்கு அப்பாத்திரத்தின் வீரியம் கதையில் சொல்லப்பட்டிருக்கும். செவி வழிச் செய்திகளாலேயே வந்தியத்தேவன் பற்றி நந்தினிக்கு தெரிய வரும். ஆனால் அவளது உள்ளத்தில் மிக எளிதாக சிம்மாசனம் இட்டு அமர்ந்து விடுவார் வந்தியத்தேவன். தன் மீது காதல் பொழியும் எல்லாப் பெண்களையும் புறந்தள்ளிச் சென்ற வந்தியத் தேவனால் மணிமேகலையை உதறித்தள்ள இயலாமல் போயிருக்கும். அவளது தூய அன்பு அவரது உள்ளத்தையும் பாதித்து இருக்குமோ என்னவோ., தயங்கி தயங்கிதான் வந்தியத்தேவன் மணிமேகலையிடம் பேசுவார்.

image

தன் காதலை விளக்கி மணிமேகலை பேருவகை கொண்டு நந்தினியிடம் பேசுவாள். இதைக் கேட்டு நந்தினியே சற்று மனமிறங்குவது போல நாவலில் கல்கி எழுதியிருப்பார். அவ்வளவு அப்பாவித்தனம் மணிமேகலையிடம் தென்பட்டிருக்கும். ஆனால் கடைசியில் மணிமேகலை செய்யும் செயலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். வந்தியத்தேவன் மீது விழுந்த கொலைப்பழியை ஏற்க சோழ சபையில் முன் வந்திருப்பார். வெறும் ஒரு தலைக் காதலுக்காக தன் தலையே துண்டாடப்பட்டாலும் பரவாயில்லை என்று துணிச்சலோடு எழுந்து நிற்கும் அந்த கதாப்பாத்திரம்.

இறுதியில் தன் காதலித்த வந்தியத்தேவன் கரங்களில்தான் தன் இன்னுயிரை விடுவாள் மணிமேகலை. கடைசி தொகுப்பிற்கு கல்கி வைத்த பெயர் “தியாகச் சிகரம்”. அருள்மொழி செய்த தியாகத்தை குறிக்கும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டிருக்கும். ஒருவகையில் இது மணிமேகலைக்கும் கூட பொருத்தமானதே! ஒரு தலைக் காதலுக்காக, எப்படியும் கை கூடப்போவதில்லை என்று தெரிந்த பின்னும், உயிரைக் கொடுத்து காதலன் உயிர் காக்க முன்வந்த மணிமேகலையும் ஒரு தியாகச் சிகரம் தானே!

5. இன்னும் சில காதல்கள்:

இவை தவிர சுந்தர சோழர் – ஈழத்து ராணி மந்தாகினிக்கு இடையேயும் ஒரு ஆழமான காதல் பேசப்பட்டிருக்கும். தனித்தீவில் தனது காதலியை தவிக்க விட்டு தான் மட்டும் அரசனாக வாழ்வதை குற்ற உணர்ச்சியோடு சுந்தர சோழர் கதாபாத்திரம் கடத்தியிருக்கும். அடுத்து அருள்மொழி மீதான காதலால் அரச குடும்பத்து பெண்கள் செய்ய யோசிக்கும் பெரும் தியாகத்தை செய்ய துணிவாள் வானதி! இந்த சம்பவமும் அந்த “தியாகச் சிகரம்” பாகத்தில் தான் நிகழும். இப்படி பல காதல் மலர்களால் பிணைக்கப்பட்ட பொன்னியின் செல்வனை மணிரத்னம் எப்படி திரைக்கு கொண்டு வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

முந்தைய பாகம்: வரலாற்றை உலுக்கிய ஆதித்த கரிகாலன் கொலை! ஆயிரம் ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.