மதுரையில் 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் வழங்கிய வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும்: அண்ணாமலை

சென்னை: “மதுரையில் இருக்கக்கூடிய சில அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் வழங்கியுள்ளனர்.போலி பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அடுத்து நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, ஒருவேளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வந்தால், அமைச்சர் பொன்முடி இதேபோல், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொல்வாரா?, அல்லது மத்திய அரசின் சார்பில் வேறொரு அமைச்சர் பட்டமளிப்பு விழாவுக்கு வந்தால், நான் போகமாட்டேன் என்று சொல்வாரா?

இதுபோன்ற நிலைப்பாட்டை அமைச்சர் பொன்முடி எடுக்கும்போது, இது எங்கே சென்று முடியும் என்ற கேள்விதான், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வருகிறது. எனவே அமைச்சர் பொன்முடி, கல்வியில் அரசியல் செய்யாமல், இதையெல்லாம் விட்டுவிட்டு, ஆளுநர், மத்திய அரசுடன் ஒரு சுமுகமான போக்கை கடைபிடித்து, மத்திய அரசிடமிருந்து என்ன வரவேண்டுமோ, அதை வாங்கிக்கொண்டு வருவதுதான் பொன்முடி, பாஜக மற்றும் அனைவருடைய கடமை.

மதுரையில் இருக்கக்கூடிய சில அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் வழங்கியுள்ளனர். மதுரை நகரில் உள்ள அவனியாபுரம் காவல் நிலையத்தில் இருந்து மட்டும் 72 போலி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.மதுரையில் இருக்கக்கூடிய மற்ற காவல் நிலையங்களில் இருந்து 128-க்கு மேல் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்கூட கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்குமுன் தமிழகத்தின் இரண்டு போலி பாஸ்போர்ட் வழக்குகள் என்ஐஏவிடம் உள்ளது. கேரள மாநிலத்தின் வழக்கு சிபிஐயிடம் உள்ளது. எனவே மதுரை போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனரோ அவர்கள் அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும். எனவே இதுதொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதப் போகிறோம். கடைசியாக நீதிமன்றம் சொல்லியும் கூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மதுரை போலி பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பான வழக்கை என்ஐஏ கையில் எடுத்து விசாரிக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி மரணத்தில் இருந்து, எத்தனை சமூகவிரோதிகள் இலங்கையைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-யிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு, இலங்கை என்பது முக்கிய இடமாக இருக்கிறது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில், தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் தொடர்பு உள்ளது. அந்த குண்டு தொடர்பாக, மதுரையில் இருக்கக்கூடிய சில பகுதிகளை கூறியுள்ளனர். இதெல்லாம் என்ஐஏ விசாரணையில் வெளிவந்துள்ளது, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர், இங்குவந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இங்குள்ள இஸ்லாமிய மக்கள் இரண்டு மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், போலி பாஸ்போர்ட் வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டு வைத்திருப்பது எதற்காக, முதல்வர் பொறுப்பேற்று ஒருவருடம் கடந்தவிட்ட நிலையில், இத்தனை சென்சிட்டிவான வழக்கு விசாரணைக்கு ஏன் அனுமதி கொடுக்காமல் வைத்திருக்கிறார் என்பது எங்களது குற்றச்சாட்டு.

இந்திய இறையாண்மைக்கு எதிராக இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, எதற்காக காவல்துறை இவ்வளவு மந்தமாக செயல்படுகிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது. எதற்காக காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டுள்ளனர். இதுதொடர்பாக நாளை நாளை மறுநாள், நிறைய ஆவணங்கள் வெளியாகவுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படக்கூடிய யாராக இருந்தாலும் விடக்கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.