தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு, அவர் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளும்… பேசுகின்ற கருத்தும் தி.மு.க அரசுக்கும், திராவிட இயக்கத்தினருக்கும் எதிராக இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் பொன்முடி புறக்கணித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அமைச்சர் எல்.முருகனை இந்த நிகழ்வுக்கு அழைத்ததைக் கண்டித்து, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை வருகை தந்தார். விமான நிலையத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆளுநரின் வருகையைக் கண்டித்து போராட்டம் நடத்திய பெரியாரிய உணர்வாளர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்பினர் கைதுசெய்யப்பட்டார்கள்.
அதைத் தொடர்ந்து துணை வேந்தர் குமார் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், மத்திய அமைச்சர் எல்.முருகன், கல்வி வல்லுநர் பல்ராம் ஆகியோரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்துகொள்ளாமல் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்துள்ளதன் மூலம், ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.