சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ரோமி பைநாடன் (52). மத்திய அரசு அதிகாரியான இவர் கடந்த 22.6.2022-ம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “என்னுடைய செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ் ஒன்றில் மின்சார பில் கட்டவில்லை என்றும், பணம் செலுத்தவில்லை என்றால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க இந்த செல்போன் நம்பரை தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் நானும் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்முனையில் பேசியவர், தன்னை மின்வாரிய அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் பணம் செலுத்துவதற்கு உதவி செய்வதாகக் கூறிய அந்த மின்வாரிய அதிகாரி, என்னுடைய செல்போனில் டீம் வியூவர் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யும்படி தெரிவித்தார். அதன்பேரில் நானும் அந்தச் செயலியை என்னுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்தேன். அதன்பிறகு என்னுடைய செல்போன், சிறிது நேரம் பயன்படுத்த முடியாதளவுக்கு ஹேங்க் ஆனது. அதன்பிறகு செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸில் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 8,80,000 ரூபாய் மூன்று தடவையாக எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நான், வங்கிக்கு தகவல் தெரிவித்தேன். அதோடு மின்வாரிய அதிகாரி என பேசியவரின் செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது. அதன்பிறகுதான் நான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு பணத்தையும் மீடடு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ரோமி பைநாடனை ஏமாற்றிய சைபர் க்ரைம் குற்றவாளியைக் கண்டறிய அண்ணாநகர் சைபர் க்ரைம் பிரிவு போலீஸாரின் உதவியை நாடினர். இதையடுத்து பைசர் க்ரைம் போலீஸார் ரோமி பைநாடனின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம், எந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பதை கண்டறிந்தனர். மேலும், ரேசர் பே வால்ட், பிபிசிஎல் வால்ட் என இரண்டு வழியாக பணம் அனுப்பப்பட்டிருந்து தெரியவந்தது. உடனடியாக சைபர் க்ரைம் போலீஸார், ரோமி பைநாடனின் வங்கியைத் தொடர்பு கொண்டு பணத்தை பரிமாற்றம் செய்யாமல் ஃப்ரீஸ் செய்யும்படி கூறினர்.
அதனால் ரோமி பைநாடனின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் கடந்த 12.7.2022-ம் தேதி மீண்டும் அவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த மோசடியில் ஈடுப்பட்டவர் யாரென்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற எஸ்.எம்.எஸ். இமெயில்கள், இணையதள விளம்பரங்கள் போன்றவற்றை நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள்உடனடியாக காவல் நிலையம் அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.