புதுடெல்லி: முதலாவது இந்தியா- இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா (ஐ2யு2) காணொலி மாநாடு வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இஸ்ரேல் பிரதமர் யாகிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் ஐ2யு2 வகுத்துள்ள வரம்பிற்குள் மேற்கொள்ளக்கூடிய திட்டப் பணிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் பொதுவான நலத் திட்டப் பணிகள் மற்றும் பரஸ்பரம் உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது நான்கு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு குறித்து ஆராயப்பட்டது.
ஐ2யு2 கூட்டமைப்பின் முக்கிய அம்சமாக 6 முக்கிய துறைகள் பரஸ்பரம் பலனளிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவுபாதுகாப்பு ஆகிய துறைகள் கண்டறியப்பட்டு இத்துறைகளில் தனியார் முதலீடு மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வது குறித்தும் ஆராயப்படுகிறது. கட்டமைப்பு மேம்பாடு, தொழிற்சாலைகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகநவீன தொழில்நுட்ப பகிர்வு மற்றும் பசுமை தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தலைவர்களின் ஆலோசனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.