குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த வாரம் திங்கள்கிழமை நடைபெறவிருக்கிறது. இதில், ஆளுங்கட்சி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை, அவரின் சமூகத்தைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் தெரிவித்த கருத்துக்கு, பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் ஊடகத்திடம் பேசிய ஷெஹ்சாத் பூனவல்லா, “வாழ்வின் சூழ்நிலையை எதிர்த்துப் போராடி, அடிமட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றி, சிறந்த எம்.எல்.ஏ விருதை வென்று ஊழலின் கறையே இல்லாத ஒருவரைப் பற்றிய தத்துவத்தில் என்ன தீமை இருக்கிறது. ஆனால், முர்மு தீய தத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அவர் பழங்குடியின சமூகத்தை அடையாளப்படுத்தவில்லை என்றும் அஜோய் குமார் கூறியிருப்பது, முர்முவை மட்டும் அவமதிக்கவில்லை.
முன்னதாக நேற்று, “இது திரௌபதி முர்மு-வை பற்றியது அல்ல. யஷ்வந்த் சின்ஹாவும் நல்ல வேட்பாளர், முர்முவும் ஒழுக்கமான நபர். ஆனால் முர்மு இந்தியாவின் மிகவும் தீய தத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரை பழங்குடியினத்தின் அடையாளமாக மாற்றக்கூடாது” என காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.