திருமலையில், 236 கோடி ரூபாயில், கர்நாடக அரசின் யாத்ரிகர் மண்டப கட்டட பணிகள் மும்முரமாக நடக்கிறது.பெங்களூரு எலஹங்கா பா.ஜ., – எம்.எல்.ஏ.,வும், திருப்பதி திருமலை தேவஸ்தானம் போர்டு உறுப்பினருமான விஸ்வநாத் நேற்று திருமலை சென்றார். அங்கு, 236 கோடி ரூபாயில் கட்டப்படும் கர்நாடக அரசின் யாத்ரிகர் மண்டப கட்டட பணிகளை ஆய்வு செய்தார்.பின், அவர் கூறியதாவது:திருமலைக்கு வரும் கர்நாடக பக்தர்களுக்கு, சிறப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது. பா.ஜ., அரசு வந்த பின், பக்தர்களின் நலன் கருதி 236 கோடி ரூபாயில் சகல வசதிகளுடன் கூடிய யாத்ரிகர் பவன் கட்டப்படுகிறது.யாத்ரிகர்கள் தங்குவதற்கு மொத்தம் 346 அறைகள் அமைக்கப்படுகின்றன.
எடியூரப்பா முதல்வராக இருந்த போது அடிக்கல் நாட்டினர். அப்போதிலிருந்து பணிகள் வேகமாக நடக்கின்றன. கர்நாடகாவில் இருந்து வரும் ௧,500 யாத்ரிகர்கள் தங்க முடியும்.முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. படிப்படியாக மொத்த பணமும் விடுவிக்கப்படும். திருப்பதியிலும் அரசின் சொத்து உள்ளது. அதையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இதன் மூலம் வரும் வருவாயில், திருமலையில் கட்டப்படும் மண்டபம் நிர்வகிக்கப்படும். கர்நாடக ஹிந்து அறநிலைய துறை மூலம் அனைத்து பணிகளும் நடத்தப்படுகிறது. கூடுதல் ஒத்துழைப்பு தரும்படி துறை அமைச்சர் சசிகலா ஜொல்லேவிடம் கேட்கப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கர்நாடகாவுக்கு தான் திருமலையில் அதிக சொத்து உள்ளது. அதாவது, 7 ஏக்கர் நிலம் உள்ளது. இன்னும் பல மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement