மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,
இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரன் எடுக்காத போது அது குறித்து யாரும் பேசுவதில்லை. ஆனால் விராட் கோலி குறித்து மட்டும் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். அது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு எல்லா வீரர்களும் ஒன்று தான்.
‘பார்ம்’ என்பது தற்காலிகமானது. தரமும், திறமையும் தான் நிரந்தரமானது. நம்மிடம் மிகச்சிறந்த தேர்வு குழு இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்ய இன்னமும் போதுமான நேரம் இருப்பதாக கருதுகிறேன்.
சர்வதேச போட்டிகளுக்கு இந்திய மூத்த வீரர்கள் சிலர் ஓய்வு எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஐ.பி.எல். போட்டியின் போது ஓய்வு எடுக்காத நீங்கள் இந்திய அணிக்காக ஆடும் போது மட்டும் ஏன் ஓய்வு கேட்கிறீர்கள். இந்த விஷயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும். ஓய்வு பற்றி பேசக்கூடாது.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.