குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் இருவரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர். அதேசமயம், தேர்தல் ஆணையமும் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஹரியானா மாநில எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவை, சண்டிகரில் அவரது இல்லத்தில் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா அவரிடம் ஆதரவு திரட்டினார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் எதிரிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறுவனங்கள் ஏவி விடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு நிறுவனங்களில் தீவிரத்தை கடந்த 60 ஆண்டுகளில் தான் பார்த்ததில்லை என்று குறிப்பிட்ட யஷ்வந்த் சின்ஹா, வாஜ்பாய் அரசில் தான் 5 ஆண்டுகள் பணியாற்றிய போது, அரசியல் எதிரிகளுக்கு எதிராக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே தோன்றியதில்லை என்றார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இதுபோன்ற தவறான பயன்பாடுகள் இருந்ததில்லை எனவும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை அரசியல் எதிரிகளை பழிவாங்க அப்பட்டமாக பயன்படுத்தபப்டுவதாகவும் யஷ்வந்த் சின்ஹா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநில அரசுகளைக் கவிழ்க்கும் முனைப்பில் ஆளுநர் அலுவகங்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
திரௌபதி முர்மு மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாக தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, “ஆளுங்கட்சியின் வேட்பாளர் இதுவரை ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில்கூட பேசாதது வருத்தமளிக்கிறது. ஒருவேளை, கடந்த 8 ஆண்டுகளில் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில்கூட பேசாத பிரதமரை அவர் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.” எனவும் தெரிவித்தார்.