"விஜய் இந்தக் காரணத்தால்தான் எங்க சதாபிஷேகத்துக்கு வரல" – எஸ்.ஏ சந்திரசேகர் நேர்காணல்

பிறந்தநாள் எப்படி போனது.. திருக்கடையூர் செல்லும் ஐடியா எப்படி வந்தது?

”திருக்கடையூர் ப்ளான் திடீர்னு முடிவு பண்ணது. `திருக்கடையூர் போனா ஆயூள் அதிகரிக்கும். ரொம்ப நல்லது’ன்னு நண்பர்கள் சொன்னாங்க. நல்லதுதானே என்று நாங்களும் கிளம்பிட்டோம். எனது அப்பா 89 வயதுவரையும், என் அம்மா 96 வயதுவரையும் வாழ்ந்தவர்கள். அம்மாவின் தங்கை எனது சித்தி மதுரையில் வசிக்கிறார். 103 வயதாகிறது. இன்னமும் நடந்துகொண்டும் செல்போன் பேசிக்கொண்டும் ஆக்டிவாக இருக்காங்க. எங்கக் குடும்பத்தோட ஜீன் கொஞ்சம் ஸ்ட்ராங்கானது. இது எல்லாத்தையும் தாண்டி நம்ம மனசை ரொம்ப சந்தோஷமா வச்சிருந்தாலே ஆயுள் அதிகரிக்கும்.

எங்களோடது சீர்த்திருத்தக் கல்யாணம். கிறிஸ்தவ முறைப்படியும் நடக்கல. இந்து முறைப்படியும் நடக்கல. அம்மியும் கிடையாது. அருந்ததியும் பார்க்கல. ஐயர் மந்திரமும் இல்ல. அப்படியெல்லாம் பார்க்காம கல்யாணம் பண்ணதாலதான், நானும் ஷோபாவும் இத்தனை வருஷம் ஒற்றுமையா இருந்திருக்கோம்னு நினைக்கிறேன். இப்போ, 80 வயசுல 12 விதமான ஹோமம் வளர்த்து திருக்கடையூர்ல முறைப்படி கல்யாணம் பண்ணோம். அதேமனைவிக்கு தாலி கட்டினேன். இதுவும் ஒருவித சந்தோஷமான அனுபவம். எல்லா குறையையும் இந்தக் கல்யாணம் தீர்த்துடுச்சி. “சினிமாத்துறையைச் சேர்ந்த தம்பதிகளில் இத்தனை வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்வது நீங்கள்தான்” என்று அங்குள்ள ஐயர்கள் வாழ்த்தினார்கள். தற்போதைய தலைமுறையினர் சின்ன சண்டை வந்தாலே பிரிஞ்சிடுறாங்க. நாங்கள் அப்படியல்ல வாழ்க்கைக்கு அர்த்தமாக வாழ நினைக்கிறோம்; வாழ்கிறோம். விஜய்க்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருக்காங்க. நாங்கள்தான் உதாரணமாக இருக்கணும்”

எஸ்.ஏ சந்திரசேகர் – ஷோபா

80 வயதிலும் எப்படி சுறுசுறுப்பா இயங்க முடியுது?

”ஆக்டிவா இருக்க ஏதாவது ஒன்னை பண்ணிக்கிட்டே இருக்கணும். தினமும் காலையில் 5.30 மணிக்கே எழுந்துடுவேன். யோகாவும் உடற்பயிற்சிகளும் பண்ணிட்டு 9.30 மணிக்குள்ள பிரேக் ஃபாஸ்ட் முடிச்சிட்டு ஆபிஸ் கிளம்பிடுவேன். இன்னைக்கு வேலையே இல்லை. எதுக்கு ஆபிஸ் போகணும்னு நினைக்கமாட்டேன். என்னை எப்பவும் பிஸியா வச்சிக்குவேன். அந்த காலத்துல, வருஷத்துக்கு அஞ்சாறு படம் டைரக்ட் பண்ணினவன் நான். எதையும் நேசித்து செய்கையில் நேரம் போவது தெரியாது. எப்போதும் சுறுசுறுப்பா இயங்கலாம்”.

எஸ்.ஏ சந்திரசேகர்

பிறந்தநாளின்போது நீங்களும் உங்கள் மனைவி ஷோபாவும் தனியாக கேக் வெட்டி ஊட்டிக்கொண்டப் புகைப்படங்களும்… திருக்கடையூர் சென்ற புகைப்படங்களும் வைரலாகி “பெத்தவங்க பிறந்தநாளுக்குக்கூட நேரில் வாழ்த்தவில்லையே” என்ற விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்படுகிறதே?

“விஜய் விஷ் பண்ணாரா? இல்லையா? கல்யாணத்துக்கு வந்தாரா? வரலியா என்பதெல்லாம் வேண்டாம். எல்லாமே அப்பா-பிள்ளைக்குள் நடக்குற தனிப்பட்ட விஷயம். விஜய் ஒரு மாஸ் ஹீரோ. நான் போனதுக்கே திருக்கடையூரில் நல்லக் கூட்டம். விஜய் வந்திருந்தால் என்ன ஆகிருக்கும்?. நான் ஷோபா கழுத்துல இல்லாம வேற ஒரு பெண் கழுத்துலதான் தாலி கட்டியிருப்பேன். நாங்கள் சந்தோஷமா பிறந்தநாள் கொண்டாடினோமா, திருக்கடையூர் போய்ட்டு வந்தோமா என்பதுதான் முக்கியம். ரெண்டுப் பேருமே சந்தோஷமா இருக்கோம். விஜய் ஹைதராபாத் ஷூட்டிங்கில் உள்ளார். ஷூட்டிங்கை பிரேக் செய்துவிட்டு வரவேண்டுமா?. கூட்டம் கூடினால் என் மனைவி காணோம்னுதான் நான் தேடணும்”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.