ஸ்ரீவில்லிபுத்தூர்: பௌர்ணமி தரிசனத்திற்காக சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர். இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
image
இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு ஜூலை 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூலை 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
image
அதேபோல் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே மலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.