சென்னை: தமிழகத்தில் 10 மின்பகிர்மான வட்டங்களில் பராமரிப்புப் பணிகளை விரைவில் சரி செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானப் பிரிவு இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை.
வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய பராமரிப்புப் பணியை ஜூலை 15-க்குள் முடிக்க வேண்டும் என கடந்த மாதம் 16-ம்தேதி நடந்த கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தினார். இதையடுத்து ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ.10 லட்சம் வீதம் நிதி வழங்கப்பட்டு, ஜூன் 17-ம் தேதியே பணியும் தொடங்கப்பட்டது.
கடந்த 8-ம் தேதி நிலவரப்படி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, சென்னை வடக்கு, திருச்சி மெட்ரோ, சென்னை தெற்கு-2, தஞ்சாவூர், நாமக்கல், சேலம் ஆகிய 10 மின் பகிர்மானவட்டத்தில் தரமற்ற வகையில் பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருப்பது அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மேற்பார்வை பொறியாளர்களும் தனி கவனம் செலுத்தி,ஜூலை 15-க்குள் பணிகளை முடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.