பெண் ஒருவருக்கு நடத்துவதுபோன்று திருச்சியில் இரண்டு வயது வளர்ப்பு பெண் நாய்க்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (51). இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், மாலதி, அனனியா என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் மணமுடித்துக் கொடுத்து விட்ட நிலையில் தனிமையில் வாடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக, லேபர்டாக் என்ற வகையை சேர்ந்த நாய் குட்டி ஒன்றை, மூத்தமகள் அனனியா பரிசாக கொடுத்துள்ளார். அந்த நாய் குட்டிக்கு ஃபெபி என பெயர் வைத்து, தங்கள் வீட்டின் மற்றொரு பெண் பிள்ளையை போல நினைத்து அனனியாவின் பெற்றோர் வளர்த்து வந்துள்ளனர்.
தற்போது ஃபெபி-க்கு இரண்டு வயதாகிறது. நிறைமாத கர்ப்பமாகவுள்ள ஃபெபி, இன்னும் பத்து நாட்களில் குட்டிகளை ஈன்றெடுக்கவுள்ளது. இதையடுத்து அந்த நாய்க்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் அதனை வளர்த்தவர்கள். இதனைத் தொடர்ந்து மாதேஸ்வரன் வீட்டில் வண்ண வண்ண தோரங்களோடு, மேடை அலங்கரிக்கப்பட்டு வளைகாப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாதேஸ்வரனின் மனைவி வளர்மதி, மகள்கள் மாலதி, அனனியா உள்ளிட்ட பெண்கள் வீட்டில் குழுமியிருந்தனர்.
மேளதாளம் இசை ஒலிக்க, சந்தனம், குங்குமம், பூ, பழம், இனிப்பு, வளையல் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகளோடு பெண்கள் ஊர்வலமாக வந்தனர். சீர்வரிசை ஊர்வலம் வீட்டை அடைந்தபோது, அங்கு சின்னஞ்சிறு பெண் போல, பட்டு பாவடை சட்டையில், மாலை அணிவிக்கப்பட்டு, நிறைமாத கர்ப்பமாக, நாய் வீட்டின் நடுவே அமர்ந்திருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் விழாவில் கலந்து கொண்டு ஃபெபிக்கு சந்தனம் தடவி, குங்குமம் பூசி, அதன் முன்னங்கால்களுக்கு வளையல்கள் அணிவித்து வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
அப்போது அதனை வளர்த்த வளர்மதி ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் நாய்க்கு பிடித்தமான சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பதார்த்தங்களும், ஏழு வகை சுவைகளில் சாதமும் பரிமாறப்பட்டது. வீட்டில் ஒரு பெண்ணுக்கு வளைகாப்பு விழா நடத்துவது போல, நாய்க்கு வாளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் கட்டுச் சோறு எனப்படும் ஏழு வகை சுவையிலான சாதம் பரிமாறப்பட்டது. பெண் நாய்க்கு நடந்த வளைகாப்பு விழா, அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சிரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM