பெங்களூரு : நடப்பாண்டு தசராவில் பங்கேற்பதற்காக, தனிமையில் உள்ள, 55 வயது தசரா யானை கஜேந்திராவுக்கு, 53 வயது யானை துர்கா பரமேஸ்வரி இரண்டாவது முறையாக துணையாக்க, வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.கிராமத்திற்குள் புகுந்து ரகளை செய்யும் யானைகளை பிடித்து, குடகு துபாரே முகாமில், ‘கும்கி’ யானையாகவும், தசரா யானையாகவும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற்ற யானைகள் மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும். இதில், 55 வயது கஜேந்திரா யானை, 1987ல் குடகு கட்டேபுரா வனப்பகுதியில் பிடிபட்டது. அன்று முதல் பிலிகிரி ரங்கநாத புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட கே.குடி முகாமில் இருந்து வருகிறது.அதன்பின், தசராவுக்கு பயிற்சி பெற்ற கஜேந்திரா, தொடர்ந்து 20 ஆண்டுகள் பங்கேற்றது. திடீரென, 2015ல் முகாமில் இருந்த 61 வயது ஸ்ரீராமாவை தந்தத்தால் குத்தி கொன்றது. இதை தடுக்க வந்த பாகன் கணபதி, 50, என்பவரையும் மிதித்து கொன்றது.அதன்பின், காலில் கட்டப்பட்டிருந்த இரும்பு சங்கலியை அறுத்து கொண்டு, மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்தது. இரண்டு நாட்களுக்கு பின், யானையை மீண்டும் பிடித்து முகாமில் அடைத்தனர்.
அன்று முதல் தனிமையில் வைத்தனர்.தற்போது யானை அடக்கப்பட்டு, கட்டளைக்கு அடிபணிகிறது. யானையின் தனிமையை போக்க, எச்.டி.கோட்டே நாகரஹொளே தேசிய சரணாலய முகாமில் உள்ள 53 வயது துர்கா பரமேஸ்வரி யானையை துணையாக்க வனத்துறையினர் தீர்மானித்துள்ளனர்.இது தொடர்பாக, வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு கடிதம் எழுதிதப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், கே.குடியிலுள்ள முகாமுக்கு துர்கா பரமேஸ்வரி இடம் மாற்றம் செய்யப்படும், என அதிகாரிகள் கூறினர்.கடந்த 1972ல் பிடிபட்ட துர்கா பரமேஸ்வரி, முகாமில் வைக்கப்பட்டிருந்தது. மைசூரு தசராவிலும் பங்கேற்றுள்ளது. 2015ல் யானையையும், பாகனையும் கொன்ற கால கட்டத்தில், கஜேந்திராவுக்கு, துணையாக இதே துர்கா பரமேஸ்வரி யானை அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement