நடப்பு கல்வியாண்டிற்கான முதல் செமஸ்டர் பொறியியல் தேர்வு முடிவுகளைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது அண்ணா பல்கலைக்கழகம்.
அதில் 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் 100-ல் 62 பேர் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடத்திலாவது தோல்வி அடைந்திருக்கின்றனர். 2020-21 ஆண்டில் 40-45 சதவிகிதமாக இருந்த தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை தற்போது மேலும் குறைந்திருப்பது கவலை அளிக்கும் ஒன்று. இந்த அதிர்ச்சிதரும் தேர்வு முடிவுகள் பல கோணங்களில் யோசிக்க வைத்திருக்கின்றன.
கோவிட் காரணமாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின்றி கல்லூரிகளில் நேரடியாக சேர்ந்திருப்பவர்களே தற்போதைய முதலாம் ஆண்டு மாணவர்கள். பெருந்தொற்று இவர்களின் கல்வி கற்கும் முறை, கல்வி ஆண்டின் அட்டவணை என அனைத்தையும் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மொத்தமாக மாற்றியிருக்கிறது. கோவிட் முதல் அலை ஊரடங்கால் ரத்துசெய்யப்பட்ட 11-ம் வகுப்பின் கடைசி பொதுத்தேர்வில் தொடங்கிய இந்த பாதிப்பு தற்போது வரை தொடர்கிறது. இந்த மாணவர்கள் 12-ம் வகுப்பின் பெரும்பகுதியையும் ஆன்லைன் வகுப்புகளிலேயே செலவிட்டனர். கடைசி மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி சென்று பாடம் கற்றிருக்கிறார்கள். தனியார் பள்ளி மாணவர்களின் கற்றல் இப்படி இருக்க அரசு பள்ளி மாணவர்களின் நிலை மிகவும் மோசம். அதைத் தொடர்ந்து இரண்டாம் அலையின் வீரியம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளியது.
முந்தைய தேர்வுகளின் செயல்பாடுகளை வைத்து கொடுக்கப்பட்ட மதிப்பெண்களின்படி பொறியியல் சேர்க்கைகளுக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. முதல் ஒரு மாத வகுப்புகள் இணையம் வழியாக நடத்தப்பட்டு பின்னர் மாணவர்கள் அவரவர் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் இரண்டே மாத நேரடி வகுப்புகளுக்குப் பிறகு கோவிட்டின் பரவல் அதிகரிக்க ஜனவரி மாதம் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கவேண்டிய செமஸ்டர் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குத் தள்ளிப் போயின. அதிலும் இணைய வழித் தேர்வா, நேரடித் தேர்வா என்ற குழப்பம் கடைசிவரை நீடித்த நிலையில் நேரடித் தேர்வின் மூலம் மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகளே இவை. இதுகுறித்து கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
இதன் காரணமாகத்தான் பள்ளியில் நன்கு படிக்கும் மாணவர்களே கூட கல்லூரியில் சேர்ந்த பிறகு அச்சூழலுக்கு பொருந்திப்போக சில காலம் எடுத்துக்கொள்வர். அதற்குள் அவர்கள் அரியர் வைப்பதும் இயல்பான ஒன்றே. சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். சி.பி.எஸ்.இ தொடங்கி பல்வேறு வித பாடத்திட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் இங்கு ஒரே இடத்தில் படிக்க வருகிறார்கள். இங்கு தமிழ் வழியில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் முதல் செமஸ்டரில் ஒன்றிரண்டு அரியர்கள் வைப்பதும் சகஜம் தான். ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த தேர்வு முடிவுகளை நாம் வேறு விதமாக அணுக வேண்டும்” என்று அதற்கான காரணங்களையும் விளக்குகிறார் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆலோசகரும் மாற்றம் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான சுஜித் குமார்.
மேலும், “ கோவிட் தொற்று கடந்த இரண்டாண்டு காலம் நம் மாணவர்களின் கற்றல் முறையை மொத்தமாக மாற்றியிருக்கிறது. நம் ஊரில் ஆன்லைன் வகுப்புகள் குறித்த சரியான புரிதல் இன்னமும் இல்லை. அவை எல்லோருக்கும் சாத்தியப்படும் ஒன்று கிடையாது. ஐ.டி நிறுவனங்களில் நடத்தப்படும் ஆன்லைன் மீட்டிங்குகள்கூட அதற்கான அனைத்து வசதிகளும் முன்பே அளிக்கப்பட்டு அதிகபட்சம் ஒன்றரை மணிநேரம்தான் நடத்தப்படும். ஆனால் 6-8 மணி நேர பள்ளி கல்லூரி வகுப்புகளை நடத்த ஆசிரியர்களும் தயாராக இல்லை. அதை கவனித்து பாடம் கற்கும் மனநிலை மாணவர்களும் கிடையாது. மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நம் மாணவர்கள் எழுதிப் பயிற்சி பெரும் வழக்கத்தை வெகுவாக குறைத்துள்ளது. இவை அனைத்தும் நம் கல்விமுறையின் Learning outcomes-ஐ கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மிக அதிக அளவில் பாதித்திருக்கிறது.
12-ம் பொதுத்தேர்வு வரலாற்றில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் மிக அதிகம். அதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் கல்லூரிகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் அதிக அளவில் உயர்ந்தது. ஆனால், தேர்வுகள் இல்லாமல் பெறப்பட்ட மதிப்பெண்களின் பிரதிபலிப்பே இந்த செமஸ்டர் முடிவுகள். ஆன்-லைன் ஆப்-லைன் என தேர்வு முறைகள்தான் வேறே தவிர, படித்து எழுத வேண்டியது மாணவர்களின் கடமையல்லவா. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைவு என கல்லூரிகளை மட்டுமே குறை கூறுவது தவறு. பள்ளிகளுக்கு இதில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. மறுபுறம் கல்லூரிகளும் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாக ஆன்லைன் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு சிறந்த முறையில் ப்ரிட்ஜ் கோர்ஸ் வகுப்புகளை நடத்த வேண்டும். பொறியியல் பாடங்களைத் தொடங்குவதற்கு முன்பு சுமார் ஒரு மாத காலத்திற்கு 11, 12-ம் பாடங்கள் அனைத்தும் ரிவைஸ் செய்யப்பட வேண்டும். தமிழ் வழியில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்து அனைவரையும் சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இவை எதுவுமே இல்லாதபோதுதான் இதுபோன்ற முடிவுகள் வருகின்றன. ஆன்-லைன், ஆல்-பாஸ் ஆகியவற்றை தாண்டி இதுபோன்ற வகுப்புகளை கல்லூரிகளும் செயல்படுத்தாமல் மாணவர்களும் தேர்ச்சி பெற்றால் போதும் என்றிருப்பதன் விளைவுகள் ப்ளேஸ்மென்ட் நேரத்தில் தான் தெரியும். காரணம், மதிப்பெண்களை தாண்டி மாணவர்களின் திறன்களைத்தான் கம்பெனிகள் எதிர்பார்க்கின்றன” என்று முடித்தார் சுஜித் குமார்.
மறுபுறம் நம் கல்வி முறையில் உள்ள குறைகளே இதற்கான காரணங்களாக ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் அண்ணா பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர்.பாலகுருசாமி. “ பேரிடர் காலத்தில் நேரடி வகுப்புகள் இல்லாதது தற்போதைய முடிவுகளில் மிக சிறிய பங்கே வகிக்கின்றன. காரணம், கணிதம், இயற்பியல் பாடங்களில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைவது இன்று நேற்று நடக்கும் கதையல்ல. இது 15 வருடங்களுக்கும் மேலாக தொடரும் ஒன்று. இதற்கான காரணங்களை அறிய 11-ம் வகுப்பில் இருந்து நாம் தொடங்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடங்களை நடத்துவது கிடையாது. 12-ம் வகுப்பு பாடங்களை மட்டும் நடத்தி அதிலும் குறிப்பிட்ட பேட்டர்னில் கேட்கப்படும் வினாக்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. இதை மட்டுமே படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களின் உண்மை நிலை கல்லூரி வந்த பிறகே தெரிகிறது. மற்ற கல்லூரிகளை விட்டுவிடுங்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலோனோர் இந்த இரு பாடங்களில் 200 மதிப்பெண்கள் பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் முதல் செமஸ்டரிலேயே கணித, இயற்பியல் பாடங்களில் தோல்வி அடைகின்றனர். எனில் எங்கே பிரச்னை என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். எனவே 12-ம் வகுப்பு மதிப்பெண் மாணவர்களின் உண்மையான மதிப்பீடு கிடையாது.
இது ஒரு ஒருபுறம் இருக்க பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் இப்பாடங்களுக்கான தேர்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அதுபோன்ற கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் மோசமாக இருக்கும். எனவே, இரு தரப்பிலும் குறைகள் இருக்கின்றன” என்றும் கூறும் இவர் இதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் பேசுகிறார்.
“ 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை மீண்டும் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அதன்படி உயர்கல்விக்கான சேர்க்கை 11 மற்றும் 12 ஆகிய இரு வகுப்புகளில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே நடைமுறை படுத்தப்பட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக பள்ளிப் படிப்பை முடிக்கும்போது மாணவர்களின் அடிப்படை புரிதல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்” என்கிறார்.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு வெளியாகியிருக்கும் இந்த முடிவுகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. இருபக்கமும் குறைகள் இருக்க அவை இன்னமும் சரிசெய்யப்படாமல் போனால் பாதிக்கப்படப்போவது என்னவோ மாணவர்களின் எதிர்காலம்தான். தக்க முடிவெடுக்கவேண்டியது அரசின் கடமை.