புதன்கிழமை (ஜூலை 13) உறுதியளித்தபடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்வார் என இலங்கை காத்திருக்கிறது. இதற்கிடையில், GoGotaGo எதிர்ப்பாளர்கள் தற்போதைய ஆட்சியில் யாரும் இருக்க முடியாது என்பதை உறுதிசெய்ய தயாராக உள்ளனர்.
இன்னும் கூடுதலான போராட்டங்களை எதிர்பார்த்து, சில GoGotaGo எதிர்ப்பாளர்கள், தங்களை அரசு தொலைக்காட்சியில் நேரடியாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். இதனால் பாதுகாப்பு கருதி, அரச ஒலிபரப்பான இலங்கை ரூபவாஹினி கார்பிரேஷன் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) மாலை இலங்கை இராணுவம் நிறுத்தப்பட்டது.
அரசியலமைப்பு ரீதியாக, இப்போது என்ன நடக்க வேண்டும்?
இலங்கையின் அரசியலமைப்பின் விதிகளின் கீழ், ஜனாதிபதியின் அலுவலகம் வெற்றிடமாக இருக்கும் போது, பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் இருந்து ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வரை, இடைக்கால ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொள்பவர் பிரதமராக இருக்க வேண்டும்.
ஜனாதிபதி அலுவலகம் காலியாகி 30 நாட்களுக்குள் இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், மேலும் வேட்பாளருக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை தேவைப்படும்.
அண்மைய நாட்களில், இலங்கையை பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்டெடுக்க உதவுவதற்காக, மே மாதம் 2வது வாரத்தில் ஜனாதிபதி கோட்டாபயவினால் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களின் “நண்பர்” என எதிர்ப்பாளர்களால் குறிவைக்கப்பட்டார்.
நிலைமை சரியாகும் முன் இன்னும் மோசமாகிவிடும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் தனது முதல் உரையில் எச்சரித்திருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்க விக்கிரமசிங்க அரசு “தோல்வியுற்றதாக” எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
கோத்தபாயவுக்குப் பின் விக்ரமசிங்கே வருவாரா?
அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு வழிவகுக்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக விக்கிரமசிங்கே ஜூலை 9 அன்று ட்வீட் செய்திருந்தார். ஆனால் அவர் உண்மையில் செவ்வாய்க்கிழமை மாலை வரை ராஜினாமா செய்யவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிரதமரின் பதவியும் காலியாக இருந்தால், நாடாளுமன்ற சபாநாயகர் தற்காலிக குடியரசுத் தலைவராவார். ஆனால், விக்கிரமசிங்கே இன்னும் பிரதமராக இருந்தால் – மற்றும் ராஜபக்ச உண்மையில் ராஜினாமா செய்தால், குறைந்தபட்சம் பாராளுமன்றம் வேறொருவரை அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கும் வரை அவர் ஜனாதிபதியாக இருப்பார்.
விக்ரமசிங்க திங்களன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பால் யாரும் செல்ல முடியாது, வெளியில் இருந்து விஷயங்களைச் செய்ய பாராளுமன்றத்தை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன், ஒருவர் மக்களுக்குச் செவிசாய்க்க வேண்டும், ஆனால் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும். இலங்கைக்கு அனைத்து கட்சி அரசாங்கம் தேவை. அதற்காக நாம் உழைக்க வேண்டும்” என்றார்.
ராஜபக்ச குடும்பக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் (SLPP) பெரும்பான்மையானவர்கள் விக்ரமசிங்கேவை ஜனாதிபதி பதவிக்கு மாற்றுவதற்கு ஆதரவளிப்பதாக சில இலங்கை ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே அவரும் தேர்தலில் வேட்பாளராக இருப்பார் என்று தெரிகிறது. விக்கிரமசிங்கே ஒரு நியமன எம்.பி., அவருடைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு (யூ.என்.பி.) பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லை.
ஜனாதிபதியாகும் வாய்ப்பு வேறு யாருக்கு உள்ளது?
விக்கிரமசிங்கவின் யூ.என்.பி.யின் முன்னாள் உறுப்பினரும் இப்போது தனது சொந்தக் கட்சியான சமகி ஜன பலவேகய (எஸ்.ஜே.பி.) க்கு தலைமை தாங்கும் சஜித் பிரேமதாச, “இடைக்கால” ஜனாதிபதிக்கான எதிர்க்கட்சியின் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி, நாட்டை வழிநடத்தவும் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து ஒரு வழியைக் கண்டறியவும் தயாராக இருப்பதாக அறிவித்தார். 225 பேர் கொண்ட சபையில் எஸ்.ஜே.பி. 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
கோட்டாபய ராஜினாமா செய்வதால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப தற்போதைய அரசியலமைப்பு கீழ் உடனடியாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யப்படுவரா அல்லது அதற்குப் பிறகு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கு முன் எப்போதாவது ஜனாதிபதியின் அலுவலகம் இவ்வாறு காலியாகியுள்ளதா?
இலங்கையின் ஜனாதிபதி பதவியின் 44 ஆண்டுகால வரலாற்றில், இரண்டாவது தடவையாக இந்த அலுவலகம் வெற்றிடமாக உள்ளது.
இலங்கையின் முதலாவது ஜனாதிபதி (executive President) ஜே ஆர் ஜெயவர்த்தனே ஆவார். அவர் 1989 வரை ஜனாதிபதியாக இருந்தார். அவருக்குப் பின் அவரது யூ.என்.பி. சகாவான ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்கு வந்தார். இவர் SJB தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையாவார்.
1993 ஆம் ஆண்டு மே தினக் கூட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தற்கொலை படையால், பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போதுதான் முதன்முறையாக அலுவலகம் காலியானது.
கொல்லப்பட்ட பிரேமதாசாவுக்கு பதிலாக வேறொருவரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்றம் கூடும் வரை, அப்போதைய பிரதமராக இருந்த டிங்கிரி பண்டார விஜேதுங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றார்.
மே 7, 1993 இல், பிரேமதாசாவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக பாராளுமன்றத்தால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மூன்றாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விஜேதுங்க பதவியேற்றார். 1994 இல் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்லில், எதிர்க்கட்சியான SLFP வெற்றி பெற்றது. அதன் பின்னர் ஒரு பதவிக் காலத்தின் மத்தியில் ஜனாதிபதி பதவி காலியாகவில்லை.
சந்திரிகா குமாரதுங்க பிரதமரானார், பரந்த அதிகாரங்கள் இருந்தபோதிலும், விஜேதுங்க அவரை அரசாங்கத்தை நடத்த அனுமதித்தார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார், ஆனால் அவர் போட்டியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் காமினி திஸாநாயக்க பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது மனைவி சிறிமா அவருக்குப் பதிலாக பதவியேற்றார். எவ்வாறாயினும், SLFP வேட்பாளராக இருந்த குமாரதுங்க, 62 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தீர்க்கமான வெற்றியைப் பெற்றார்.
குமாரதுங்க இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பின் சக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச இரண்டு முறை பதவி வகித்தார். 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். தொடர்ந்து 2019 நவம்பரில் கோத்தபய ராஜபக்ச பதவிக்கு வந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“