அதிமுக-வுக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய பொன்னையன் குரல் – சமாளிப்பாரா எடப்பாடி?

அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கிய கலகக்குரல் ஜூலை 11-ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதும் கொஞ்சம் ஓய்ந்திருந்தது.

பொன்னையன்

ஆனால், கடந்த மே மாத இறுதியிலேயே அ.தி.மு.க-க்குள் ஒரு கலகக்குரல் கேட்டது. அதாவது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் மே 31-ம் தேதி நடைபெற்றது.

இதில் பேசிய அமைப்புச் செயலாளர் பொன்னையன், “பாஜக, அதிமுக-வின் கூட்டணிக் கட்சிதான் என்றாலும், அந்த கட்சி தமிழ்நாட்டில் வளர்வது அ.தி.மு.க-வுக்கு நல்லதல்ல. காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பா.ஜ.க-வினர் இரட்டை வேடம் போடுகிறார்கள். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரத்தில் தமிழக பாஜக குரல் எழுப்பாததை சமூக வலைத்தளங்கள் மூலம் அ.தி.மு.க-வின் தொழில்நுட்ப பிரிவினர் அம்பலப்படுத்த வேண்டும். அ.தி.மு.க-வை அழித்து ஒழித்துவிட்டு, பாஜக வளரத் துடிக்கிறது” என்று கூட்டணி கட்சியின்மீது பெரிய குண்டை தூக்கிப் போட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்

பொன்னையனின் இந்த கருத்து அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி சுவரை அசைத்துப் பார்த்திருந்தது. பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து என்று அ.தி.மு.க தலைமை விளக்கமளித்ததும் விவகாரத்தின் வீரியம் சற்று குறைந்தநிலையில், ஜூன் 14-ம் தேதி ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்தது. இதற்கு மறுப்புத் தெரிவித்த சட்டப்போராட்டம் நடத்திய ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு அந்த அனல் சற்று தணிந்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம், பொன்னையன் பேசியதாகப் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி இ.பி.எஸ் தரப்புக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில், “தொண்டர்களெல்லாம் இரட்டை இலைப் பக்கம்தான் இருக்கிறார்கள். தலைவர்கள் பணம் பக்கம் நிற்கிறார்கள். இப்போ தங்கமணி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலின்கிட்ட ஓடுறாரு. அதேமாதிரி கே.பி.முனுசாமியும் ஸ்டாலினைத் திட்டுறதை நிறுத்திட்டாரு.

அதிமுக

குவாரி, எஸ்போர்ட்ல ஒரு மாசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கறாரு. எல்லாம் கொள்ளையடிச்ச, பணத்தைப் பாதுகாக்க இப்பிடி ஆடுறாங்க. எடப்பாடி மட்டும்தான் மம்தா பானர்ஜி மாதிரி ஜெயிலுக்குப் போனாலும் பரவால்லைன்னு ஸ்டாலினைக் கொஞ்சம் திட்டுறாரு. குறைஞ்சது 100 கோடி, 200 கோடி இல்லாத மாவட்டச் செயலாளர் இல்ல. எடப்பாடி பின்னாடி போனாத்தான் இதைப் பாதுகாத்துக்க முடியும். தளவாய் சுந்தரம்தான் பெரிய புரோக்கர். எடப்பாடியை கெடுக்கறதே அவர்தான்.

வேலுமணி

எல்லா மா.செ.க்களையும் எம்.எல்.ஏ-க்களையும் நாலு வருஷமா கொள்ளையடிக்க விட்டாரு. இப்போ அவரு முதுகிலேயே குத்திட்டாங்க. சி.வி.சண்முகம் பகல்லலேயே குடிச்சிட்டு இருப்பாரு. இப்போ அவர் கையில 19 எம்.எல்.ஏ-க்கள். அந்தச் சாதி அடிப்படையில் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறதால அவங்க பின்னாடி தொங்குறாங்க.

ஆறு மாவட்டத்துல இருக்குற 42 கொங்கு நாட்டு கவுண்டர்கள் எம்.எல்.ஏ-க்களில் எடப்பாடி கையில 9 பேர்தான். மீதி எல்லாரையும் காசு கொடுத்து, வேலுமணி, தங்கமணி கையில வெச்சிருக்காங்க. இதனால எடப்பாடிக்கு வேற வழியே இல்லை. நாளைக்கு முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வரலாம். சாதி அடிப்படையில் ஒரு குழு வேலை செஞ்சுட்டு இருக்கு. பதவியைப் பாதுகாத்துக்கிட்டா போதும்னு எடப்பாடி ஓடிக்கிட்டு இருக்காரு முட்டாள்தனமா. யாருமே கட்சிக்கும் விசுவாசமா இல்ல…” என்று இருந்தது.

ஓ.பி.எஸ்-ஸுடன் நாஞ்சில் கோலப்பன்

`இது என் குரலே இல்லை. யாரோ மிமிக்ரி செய்து இருப்பதாக’ பொன்னையன் மழுப்பினாலும், `அது பொன்னையன் தான்’ என நாஞ்சில் கோலப்பன் அடித்து கூறுகிறார்.

இந்த விவகாரம் எடப்பாடி முகாமுக்குள் புது புயலே கிளப்பி இருக்கிறது. இதுதொடர்பாக எடப்பாடி முகாமுக்குள் விசாரித்தபோது, “பொன்னையன் ரொம்பவே சீனியர். அவரே விவரம் அறியாமல் போனில் இப்படி பேசி இருக்கிறார். ஆடியோவில் பேசுவது பொன்னையன்தான் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

கே.பி. முனுசாமி

ஒருவேளை அவர் மீது நடவடிக்கை எடுத்தால், எங்கள் தரப்பிலிருந்து வெளியேறி, ஓபிஎஸ் பக்கம் சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. ஆடியோ குறித்து பொன்னையனிடம் எடப்பாடி இரவே கேட்டார். ‘தெரியாம நடந்து போச்சுன்னு’ சொன்னாராம். அதேபோல, முனுசாமி, வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் என பலரும் பொன்னையன் மீது கடுப்பில் இருக்கிறார்களாம்.

சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் டெல்லி போய்ட்டு வந்ததும், பிரச்னை பெரிதாக வாய்ப்பு இருப்பதால், அவரை சொந்த ஊருக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என்றனர்.

ஒற்றைத் தலைமை விவகாரத்தின்போது, மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி தரப்பு பணம் கொடுத்து வளைத்து விட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு சொல்லிக் கொண்டே இருந்தனர். இப்போது பொன்னையன் ஆடியோ அதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த சிக்கல்களை எப்படி கையாளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.