“அரியணை தயார்; சின்னவர் மணி மகுடம் சுமப்பார்’’ – உதயநிதியைப் புகழ்ந்து தள்ளிய வேலூர் திமுக-வினர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி தி.மு.க சார்பில் மூலைகேட் பகுதியில், நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நேற்றிரவு நடைபெற்றது. வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். கைத்தறித் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி, வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளையும் பொற்கிழிகளையும் வழங்கினார்.

முதலில் பேசிய எம்.பி கதிர் ஆனந்த், “அண்ணன் உதயநிதிக்கும் எனக்கும் சின்ன பொருத்தம். அவர் முதன் முதலாக கன்னிப் பேச்சாக தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது வேலூர் மாவட்டத்தில் தான். நாடாளுமன்றத் தேர்தலில் ஊரெல்லாம் போய் பிரசாரம் செய்தார். 39-க்கு, 38 தொகுதிகளை வென்று கொண்டு வந்தார். அதுமட்டுமா, சட்டமன்றத் தேர்தலிலும் களமிறங்கினார். ஒரேயொரு செங்கல்லை கையிலெடுத்து, இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய பிரசாரத்தை மேற்கொண்டு, பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்தார். போர்க்குணத்துடன் போராடக் கூடியவர் உதயநிதி.

உதயநிதி

உங்களுக்காக அரியணை காத்து கொண்டிருக்கிறது. அவகாசத்தை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் பட்டம் சூடக்கூடிய நாள் வெகு விரைவில் இல்லை. வாருங்கள். மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல, என் அப்பாவிடமிருந்து மாவட்டச் செயலாளர் நந்தகுமார் நிறைய விஷயங்களைக் கற்று கொண்டார். நந்தகுமாரிடமிருந்து, ‘விடாத… முயற்சிப் பண்ணு. கடைசி வரைக்கும் முயற்சிப் பண்ணு. ஜெயிக்கிற வரைக்கும் விடாமல் முயற்சிப் பண்ணு’ என்பதை, நான் கற்று கொண்டிருக்கிறேன். நந்தகுமார் வழியில் நானும் பின்பற்றி வந்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் பேசுகையில், ‘‘சின்னவர் உதயநிதி, இந்த இயக்கத்தின் ஹீரோ. எனக்கெல்லாம் வரலாறு கிடையாது. கதிர் ஆனந்த்துக்காவது ஒரு வரலாறு உண்டு. அவரின் தந்தை அமைச்சர். மிகப்பெரிய தலைவர். கழகத்தின் பொதுச் செயலாளர். அதேபோல தான் நம்முடைய சின்னவர் பிறக்கின்றபோதே முதலமைச்சரின் பேரனாகப் பிறந்தவர். இப்போது, அவரின் தந்தை முதலமைச்சர். அவர் தான் இன்னும் 50 ஆண்டுகாலம், இந்த நாட்டை ஆளப்போகிறார்.

சின்னவர் நம்முடைய எதிர்காலம். சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினரும் அவர்தான். எவன் எவனோ ஜோசியம் சொல்கிறான். நான் ஆன்மிகத்தை நம்பக்கூடியவன். ஆனால், ஜோசியத்தை நம்ப மாட்டேன். ‘தளபதிக்குக் கட்டம் சரியில்லை. ஜாதகம் சரியில்லை. அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்’ என்று சொன்னார்கள். இன்றைக்கு சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் நம் தலைவர். ‘சின்னவர் மந்திரி சபைக்கு வந்தால், பிரளயம் ஏற்படும்’ என்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் சொல்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் இது. உன் உப்பன் வந்தாலும், உன் மாமன் மோடி வந்தாலும் தி.மு.க-வை அசைக்க முடியாது. சின்னவர் கண்டிப்பாக மணி மகுடத்தை சுமப்பார்’’ என்றார்.

உதயநிதி

இறுதியாக, உதயநிதி பேசுகையில், ‘‘வேலூர் என்றாலே, எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் நம்முடைய பொதுச்செயலாளர் துரைமுருகன் தான். இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வர முடியவில்லை. கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார். அவர் இங்கு இல்லையென்றாலும், மனம் முழுவதும் இங்குதான் இருக்கும். கலைஞருடன் பயணித்தவர். 60 ஆண்டு காலம் கழகத்துக்காக உழைத்தவர். என்னைத் தூக்கி வளர்த்தவர். நான் அவரை ‘மாமா’ என்று தான் அழைப்பேன். அவர் என்னை ‘வாயா.. போயா’ என்று தான் கூப்பிடுவார்.

இங்கு பொற்கழிப் பெற்ற மூத்த முன்னோடிகள் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் பார்த்திருப்பீர்கள். நான் அவர்களைப் பார்த்தது கிடையாது. கலைஞர், பேராசிரியர் தாத்தாக்களைப் பார்த்துள்ளேன். மூத்த முன்னோடிகளைப் பெரியார், அண்ணா, கலைஞராகப் பார்க்கிறேன். உங்கள் பாதம் தொட்டு ஆசி வாங்க வேண்டுமென்று ஆசை. ஆனால், நேரமில்லை’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.