EPS removes OPS supporters from ADMK: அ.தி.மு.க.,வில் இருந்து ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 18 பேரை நீக்கம் செய்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: தாம்பரம், தரமணி, எழும்பூர், அடையார்… வெள்ளி, சனி கிழமைகளில் இந்த ஏரியாக்களில் மின்தடை!
ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் உடன் இருந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.டி.சி.பிரபாகர் ஆகியோர், அ.தி.மு.க சிறப்பு பொதுக்குழுவில், ஓ.பி.எஸ் உடன் சேர்த்து நீக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ஓ.பி.எஸ் அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட பிற பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து, இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக கொள்கைக்கும், சட்ட திட்டங்களுக்கும் மாறுபட்டு, கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட கீழ்கண்ட நிர்வாகிகள் கட்சியிலிந்து நீக்கப்படுகின்றனர்.
வர்த்தக அணிச் செயலாளர் வெங்கட்ராமன், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேனி மாவட்டச் செயலாளர் சையது கான், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன், புதுச்சேரி மேற்கு மாநிலச் செயலாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஓ.பி.எஸ் இன் மகனும் அ.தி.மு.க.,வின் ஓரே மக்களவை எம்.பி,யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஓ.பி.எஸ் இன் மற்றொரு மகன் ஜெயபிரதீப் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், செய்தி தொடர்பாளர்கள் கோவை செல்வராஜ் மற்றும் மருது அழகுராஜ், தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் அம்மன்.பி.வைரமுத்து, புரட்சிதலைவி பேரவை துணைச் செயலாளர் ரமேஷ், தகவல் தொழில் நுட்ப பிரிவு திருச்சி மண்டலச் செயலாளர் வினுபாலன், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தென்சென்னை தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சைதை எம்.எம்.பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் அஞ்சுலட்சுமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.