இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் – தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டன் ஓவலில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

முதல் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரது ஆக்ரோஷமான பந்து வீச்சு சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வெறும் 110 ரன்னில் ‘சரண்’ அடைந்தது. ‘ஸ்விங்’ தாக்குலில் அட்டகாசப்படுத்திய பும்ரா 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதில் ஜாசன் ராய், ஜோ ரூட், லிவிங்ஸ்டன் ஆகியோரை டக்-அவுட்டில் வீழ்த்தியதும் அடங்கும். இந்திய அணி எளிய இலக்கை 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து அசத்தியது.

தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை சரி செய்து அதற்கு இன்றைய ஆட்டத்தில் பரிகாரம் தேடிக்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் அவசரகதியில் மட்டையை சுழட்டுவதை தவிர்த்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பார்கள். முன்னணி வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமையும்.

அதே சமயம் ஓவலில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள். பும்ராவும், முகமது ஷமியும் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை பதம் பார்க்க ஆயத்தமாக உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.