இங்கிலாந்து பிரதமர்: முதல் சுற்று தேர்தலில் முதலிடம் பிடித்து ரிஷி சுனக் வெற்றி!

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், அடுத்தடுத்து எம்.பி.க்களின் ராஜினாமா என சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வம்சாவளிகளான ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேன், பாகிஸ்தானைப் பூா்விகமாக கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மற்றும் பென் வேலஸ், பென்னி மோர்டான்ட் உள்பட 11 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர். தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் காலக்கெடு நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த நிலையில் சஜித் ஜாவித் உள்பட 3 பேர் போட்டியில் இருந்து பின்வாங்கினர்.

இதன் மூலம் கட்சித்தலைவர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் 8 பேர் களத்தில் இருந்தனா். இந்த நிலையில், முதல் சுற்று தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். அதில், 88 வாக்குகள் பெற்ற ரிஷி சுனக் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பென்னி மோர்டான்ட் 67, லிஸ்டிரஸ் 50, கெமி படனாக் 40, டாம் டுகெந்தாட் 38 வாக்குகள் பெற்றுள்ளனர். சுயெல்லா பிரேவர்மேன் 32 வாக்குகள் பெற்று நூலிழையில் அடுத்த சுற்றில் நுழைந்துள்ளார். அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு 30 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், நாதிம் சகாவி, ஜெரிமி ஹண்ட் ஆகியோர் முறையே 25, 18 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தனர்.

நாசா வெளியிட்ட ஆச்சரியப்பட வைக்கும் பிரபஞ்சத்தின் புகைப்படம்!

இந்த நிலையில், அடுத்த சுற்றுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. அடுத்த சுற்றுக்கான தேர்தலில் 6 பேர் களத்தில் உள்ளனர். கடைசி இருவா் தோந்தெடுக்கப்படும் வரை பலசுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும். இறுதிச்சுற்றில் போட்டியிடும் இருவரில் ஒருவரை கட்சியின் சுமாா் 2 லட்சம் உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுப்பா். அவரே கட்சி தலைவராகவும் பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவாா். என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி. இவரது மகள் அக்சதா மூர்த்தி. புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இவர் படித்த போது, உடன் பயின்ற ரிஷி சுனக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்தவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.