திருவனந்தபுரம்: இந்தியாவில் முதன் முறையாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை (மங்கிபாக்ஸ்) நோய், தற்போது உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த நோய் இந்தியாவுக்கும் வந்து விட்டது. கேரள மாநிலம், கெல்லத்தை சேர்ந்த நபர் கடந்த 12ம் தேதி அமீரகத்தில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன.திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவு நேற்று மாலை வந்தது. அதில் குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் குரங்கு அம்மை ேநாயாளி கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 11 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது, குரங்கு அம்மை நோயாளியும் இங்கு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்.