இந்தியா-சீனா இடையிலான ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை வரும் 17ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லடாக் எல்லையில் கடந்த 2020 மே மாதம் தொடங்கிய மோதலையடுத்து இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு அதிகாரிகளும் இதுவரை 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதன் பலனாக சில பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. எனினும் ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக் மற்றும் தெப்சங் ஆகிய மலைப்பகுதிகளில் சீனா அதிகளவில் படைகளைக் குவித்துள்ளது.
16வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் இந்தப் பகுதிகளில் இருந்து சீனப்படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த உள்ளது.
அண்மையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சீனவெளியுறவு அமைச்சர் யாங்-லீயை சந்தித்துப் பேச்சு நடத்திய போது விரைவில் அடுத்த 16வது சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 17ஆம் தேதி பேச்சு நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.