லார்ட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லார்ட்சில் நடக்கிறது. இந்திய வீரர்கள் மீண்டும் சாதிக்கும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வென்று சாதிக்கலாம்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஓவலில் நடந்த முதல் போட்டியில் 10 விக்கெட்டில் வென்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று பாரம்பரியமிக்க லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (58 பந்தில் 76 ரன்), ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இது இன்றும் தொடர வேண்டும். தொடை பின்பகுதி காயத்தால் அவதிப்படும் ‘சீனியர்’ கோஹ்லி, களமிறங்குவது இன்றும் உறுதியில்லாமல் உள்ளது. இருப்பினும் ‘மிடில் ஆர்டரில்’ சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஜோடி அணிக்கு கைகொடுக்கலாம்.
‘ஷார்ட் பிட்ச்’ பந்தில் தடுமாறும் ஸ்ரேயாஸ், விரைவில் மீண்டு வர வேண்டும். இவருக்கு போட்டியாக தீபக் ஹூடா இடம் பெற காத்திருக்கிறார். பின் வரிசையில் ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவுள்ளனர்.
பவுலிங் நம்பிக்கை
ஓவலில் எழுச்சி பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா (6 விக்.,), முகமது ஷமியுடன் (3), பிரசித் கிருஷ்ணா (1) கூட்டணி 10 விக்கெட்டையும் சாய்த்து மிரட்டியது. லார்ட்சிலும் இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என ரசிகர்கள் நம்புகின்றனர். சுழலில் சகால் காத்திருக்கிறார். தவிர ‘ஆல் ரவுண்டர்கள்’ ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜாவும் வெற்றிக்கு கைகொடுக்க உள்ளனர்.
பேட்டிங் பலம்
இங்கிலாந்து ஒருநாள் அணியில் கேப்டன் பட்லர், ஜேசன் ராய், ஜோ ரூட், பேர்ஸ்டோவ், ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் என வலுவான பேட்டிங் படை காணப்படுகிறது. இருப்பினும் முதல் போட்டியில் 4 வீரர்கள் ‘டக்’ அவுட்டான சோகத்தில் இருந்து இன்று மீள்வரா என பார்க்கலாம்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் டேவிட் வில்லி, கார்ஷ், ஓவர்டன் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு தொல்லை தர முயற்சிக்கலாம். ‘சுழலில்’ அசத்த மொயீன் அலி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement