இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு தனித்துவமான ரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. வழக்கமாக A,B,O மற்றும் AB ஆகிய ரத்த வகைகளே இருக்கும்.
ஆனால் குஜராத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு அந்த 4 ரத்த வகைகளில் இல்லாத EMM Negative என்ற புதுவகை ரத்தம் இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
வழக்கத்துக்கு மாறான ரத்தவகை உலகிலேயே இதுவரை 9 பேருக்கு மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தின் 65 வயது முதியவருக்கு இருப்பது கண்டறியப்பட்டதோடு அந்த எண்ணிக்கை பத்தாக கூடியிருக்கிறது.
இருதய சிகிச்சைக்காக அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த முதியவருக்கு ரத்தம் தேவைப்பட்டதால் அவரது மாதிரி முதலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி ப்ரத்தாமா ஆய்வகத்தில் பரிசோதித்தபோது அந்த முதியவரின் ரத்தம் மற்ற எந்த வகை ரத்தத்தோடும் ஒத்துப்போகாமல் இருந்ததால் சூரத் நகரில் உள்ள ரத்த தான மையத்திற்கு அவரது மாதிரிகள் அனுப்பப்பட்டிருக்கிறது.
அங்கும் கண்டுபிடிக்கப்படாததால் அந்த நபரின் ரத்த மாதிரி அமெரிக்காவுக்கு அனுப்பி விசாரிக்க முடிவெடுத்து அந்த முதியவரின் உறவினரும் சென்றிருக்கிறார். அதன் பிறகு அந்த முதியவரின் ரத்தம் அரியவகையைச் சேர்ந்தது என தெரிய வந்திருக்கிறது.
மனித உடலில் இருக்கும் 4 வகையான ரத்தக் குழுக்களில் A, AB, O, B மற்றும் 42 வகைகள் அடங்கும். அதில், 375 வகையான ஆண்டிஜென்கள் இருப்பதால் அந்த ரத்த வகைகளில் EMM அதிகமாக காணப்படும். ஆனால் EMM குறைவாக இருக்கும் ரத்த வகைகளை EMM Negative எனக் குறிப்பிடுவதாக சர்வதேச ரத்தமாற்ற சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாகத்தான் பொதுவான ரத்த வகைகளை விடுத்து தனித்துவமான ரத்த வகை கொண்டவர்களாக குஜராத் முதியவர் உட்பட 10 பேரும் அறியப்படுகிறார்கள் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM