புதுடெல்லி,
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நாளை தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்கிறது.
இதையொட்டி அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
உலக தடகள போட்டிக்கு நான் நன்றாக தயாராகி உள்ளேன். எனது நம்பிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. சமீபத்தில் நான் 3 போட்டிகளில் கலந்து கொண்டேன். அவற்றில் இரண்டில் எனது தனிப்பட்ட அதிகபட்ச தூரத்தை கடந்தேன். ஒன்றில் தங்கம் வென்றேன். 3 போட்டிகளிலும் தடுமாற்றமின்றி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அது தான் முக்கியம்.
என்னால் இன்னும் சிறப்பாக செயல்பட்டு 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிய முடியும். ஸ்டாக்கோமில் நடந்த டைமண்ட் லீக்கில் 90 மீட்டர் தூரத்தை மிகவும் (89.94 மீட்டர் தூரம்) நெருங்கினேன். எனவே உலக சாம்பியன்ஷிப்பில் எனது மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் எந்த மாதிரியான மனநிலையில் இருந்தேனோ அதே போன்று இந்த போட்டிக்கு பதற்றமின்றி செல்வேன். எனது சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவேனே தவிர, எனக்குள் நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன்.
2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு வெளியேற நேர்ந்தது. அதனால் இந்த முறை தகுதி சுற்றை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். 2017-ம் ஆண்டு போட்டியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தகுதி சுற்றில் நீங்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாது. எனவே தகுதி சுற்றில் முழுமையாக கவனம் செலுத்தி அதிலும் தேர்ந்த முயற்சியை வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.